புதுக்கோட்டையில் நள்ளிரவிலும் மதுபானங்கள் விற்பனை..!

புதுக்கோட்டை நகரில், நள்ளிரவு இரண்டு மணியிலிருந்து விடியற்காலை நான்கு மணி வரை மது விற்பனை கனஜோராக நடக்கிறது. தெருவில் கடந்து செல்பவர்கள் ஒருவரையும் விடாமல் வழிமறித்து, 'சரக்கு வேணுமா?" என்று கேட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கென்றே ஆட்கள் கமிஷன் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதுக்கோட்டை நகரில் உள்ள சாந்தநாதபுரம் நான்காம் வீதியில், டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. இந்தத் வீதியின் எதிரில் தான் பேருந்து நிலையம் இருக்கிறது. தவிர, அந்தத் தெருவில் தங்கும் விடுதிகளும் பெருமளவில் இருக்கின்றன. அதனால், இருபத்துநான்கு மணிநேமும் இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, மதுவை கூவிக் கூவி விற்கிறார்கள். இரவு டாஸ்மாக் கடை அடைத்தப்பிறகு, அங்கேயே இந்த நடமாடும் இரவுக்கடை ஆரம்பமாகிவிடுகிறது. மது குடிப்பவர்கள்  குடிக்காதவர்கள் என்றெல்லாம் ஆள் பார்த்துக் கணக்கில் கொள்ளாமல், அந்த வீதியில் யார் போனாலும் இந்த இரவு விற்பனையாளர்கள் விடுவதில்லை. இதுபற்றி அந்தப்பகுதியில் விசாரித்தோம். 'இந்த வீதியிலும் அடுத்துள்ள சந்தைப் பேட்டை வீதியிலும் டாஸ்மாக் கடைகள் இருக்கின்றது. இந்த இரண்டு கடைகளுக்கும் எப்போதும் விற்பனைப் போட்டி இருக்கும். புதுக்கோட்டை நகரிலேயே, அதிகமாக மது விற்பனை நடப்பது இந்த இரண்டுக் கடைகளில்தான்.

சந்தைப் பேட்டை வீதியில்தான் காய்கறி மார்க்கெட் இருக்கிறது. அத்துடன் வெள்ளிக்கிழமையில் வாரச்சந்தையும் அந்தப் பகுதியில்தான் கூடுகிறது. எனவே, நடமாட்டம் அதிகமுள்ளப் பகுதியாக அந்த வீதி எப்போதும் இருக்கும். அதன்காரணமாக அங்கு சரக்கு விற்பனை அமோகமாக இருக்கும். சமயத்தில் சரக்குத் தீர்ந்துவிடும். சரியாக, இரவு பத்து மணிக்கு கடையை அடைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், இந்த நான்காம் வீதி நிலைமை அப்படி இல்லை. குடியிருப்புகள் கொண்ட பகுதி இது. லாட்ஜ்ஜில் தங்க வருகிறவர்களும்  வெளியூர் பயணிகளும் இந்த கடைக்கு வருவார்கள். நள்ளிரவுக்கு மேல் போகிறவர்கள் வருகிறவர்களை நெருங்கி சரக்கு விற்பது ரொம்ப நாட்களாகவே நடந்து வருகிறது. சந்தைப் பேட்டை டாஸ்மாக் கடையைக் காட்டிலும் விற்பனையை அதிகரிக்க வேண்டும். அது குறையக் கூடாது என்று டாஸ்மாக் அதிகாரிகள் இங்குள்ளவர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார்கள். அதனால், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கமிசன் அடிப்படையில் சரக்கை நள்ளிரவில் விற்பதற்கு ஆள் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!