விகடன் செய்தியால் விளைந்த நன்மை... பொன்னமராவதி மக்கள் மகிழ்ச்சி! | Hotels in ponnamaravathi are good to eat now

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (21/01/2018)

கடைசி தொடர்பு:14:30 (21/01/2018)

விகடன் செய்தியால் விளைந்த நன்மை... பொன்னமராவதி மக்கள் மகிழ்ச்சி!

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் இரவு நேரங்களில் தெருவில் நடமாடும் நாய்கள் ஓட்டலுக்கு பயன்படுத்தப்படும் நல்லத் தண்ணீரை நக்கிக் குடிப்பதால், அந்தப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர் என்ற செய்தியை கடந்த 08.01.2018.அன்று இணையத்தில் வெளியிட்டிருந்தோம்.

அந்தச் செய்தி வெளியான மறுநாள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பொன்னமராவதிப் பகுதிகளில் உள்ள ஓட்டல், மெஸ் என்று ஒன்று விடாமல் ஆய்வு செய்து, 'தண்ணீர் குடங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர், வாடிக்கையாளர்களுக்குக் குடிக்கத் தரப்படும் நன்னீர் போன்றவை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்', என்று கறாராக உத்தரவிட்டுச் சென்றார்கள். சில நாட்களிலேயே, நிலைமை முன்பிருந்த நிலைக்குத் திரும்பியது. நாய்கள் தங்களது தாக சாந்தியைத் தீர்த்துக்கொள்ள, ஓட்டல் குடங்களையே அண்டி இருக்கின்றன. இதனைப் பார்த்து பதறிய உள்ளூர் மக்கள்  உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், சமீபத்தில் மீண்டுமாக அத்தனை ஓட்டல்களுக்கும் சென்றார்கள் அதிகாரிகள். இந்த தடவை எந்த தயவு தாட்சண்யமும் காட்டாமல், குடத்திலிருக்கும் எல்லாத் தண்ணீரையும் அப்புறப்படுத்தம்படிக் கூறினார்கள். அத்துடன், பல வருடங்களாக பயன்படுத்தி, அழுக்கேறிய நிலையில் இருக்கும் ப்ளாஸ்டிக் குடங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய குடங்களை வாங்கும்படி ஓட்டல் உரிமையாளர்களை வலியுறுத்தினார்கள். அத்துடன் தண்ணீர் இருக்கும் குடங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலோ, அலட்சியமாக  இருந்தாலோ, ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்றார்கள்.

அதன்பிறகே, பிரச்னையின் தீவிரத் தன்மையை உணர்ந்துக் கொண்ட ஓட்டல் உரிமையாளர்கள் உடனடியாக செயல்களில் இறங்கினார்கள். தங்கள் கடைகளில் உள்ள பழைய தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். புதிய குடங்களை வாங்கினார்கள். அத்துடன், பெரிய ஃப்ளக்ஸ் மெட்டீரியலை வாங்கி, தண்ணீர் இருக்கும் குடங்களை பாதுகாப்பாக மூடி வைத்துள்ளார்கள். இப்போது, தெரு நாய்கள் எதுவும் தண்ணீர் குடிக்க வரவதில்லை. "அதிகாரிகள் இவ்வளவு தீவிரமாக நடவடிக்கை எடுக்கக் காரணமே விகடன்தான். அதில் வந்தச் செய்தியால் இப்படி ஒரு நன்மை எங்களுக்கு நடந்திருக்கிறது. இனிமே, பயப்படாமல் எங்கள் ஊர் ஓட்டல்களுக்குச் சாப்பிடச் செல்லலாம்" என்று மகிழ்ச்சி தெறிக்கும் குரலில் கூறினார்கள் பொன்னமராவதி மக்கள்.