மானியத்தில் வீட்டுத் தோட்ட காய்கறி விதைகள் வேண்டுமா?

காஞ்சிபுரம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வீட்டு காய்கறி தோட்ட விதை தழைகள் விற்பனை தொடங்கப்பட்டது. இதை வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே.சத்தியகோபால், காஞ்சிபுரம்  மாவட்ட  ஆட்சியர் பொன்னையா முன்னிலையில் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்

காய்கறி விதைகள் மானியம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

இத்திட்டத்தின் கீழ் வீட்டு தோட்டத்துக்குத் தேவையான காய்கறி விதைகள் அடங்கிய ரூ.20 மதிப்புள்ள காய்கறி விதை பொட்டலங்கள் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.  கத்திரி, மிளகாய், முருங்கை, அவரை மற்றும் பாகல் விதைகள் ஆகியவை இதில் அடங்கியுள்ளது.  ஒரு நபருக்கு அதிகபட்சமாக 6 பொட்டலங்கள்  வரை வழங்கப்படும். வீட்டுத் தோட்டங்களுக்கு விதைகள் தேவைப்படுவோர் ஆதார் அல்லது  குடும்ப அட்டை நகல் மற்றும் இரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அணுகி விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 19 ஆயிரத்து 600 காய்கறிவிதை பொட்டலங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

காய்கறி விதை பொட்டலங்களை வழங்கி பேசிய முதன்மைச் செயலாளர், ‘விவசாயிகள் பூச்சி மருந்து உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.  இதன்மூலம் சத்தான, ஆரோக்கியமான காய்கறிகளை  நாம்  பெற முடியும்.  எனவே, தோட்டக்கலை அலுவலர்கள் விவசாயிகளிடம் இதை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளும் பூச்சி மருந்துகள் உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் அறிந்து, அவை ஏற்படாமல் இருக்க, இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி தரமான காய்கறிகளை உற்பத்தி செய்து பயனடைய வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!