வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (21/01/2018)

கடைசி தொடர்பு:15:38 (09/07/2018)

`அம்மா இலவச ஸ்கூட்டர் திட்டம்' என்று முதல் நடைமுறைக்கு வருகிறது தெரியுமா?

 

தமிழக அரசு அறிவித்திருக்கும் அம்மா இலவச ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் 24-ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழக அரசு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்திலுள்ள உழைக்கும் பெண்களுக்கு வழங்கிட வழிகாட்டும் நெறிமுறைகள்குறித்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது, "தொலைநோக்கு பார்வைகொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பெண்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கரவாகனங்கள் வழங்க 50 சதவிகிதம் மாணியம் அல்லது ரூ-25000 இவற்றில் எது தேவையோ அத்தொகையினை 01.01.2018 முதல் ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கிடவும் இத்திட்டத்தினை ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1536 மகளிருக்கு வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் எதிர்வரும் 22.01.2018 முதல் 05.02.2018 வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்படிவத்துடன்
பணிபுரிவதற்கான சாண்றுகள் ஓட்டுநர் உரிமம், இருப்பிடச் சான்று, கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், வயதுசான்று உள்ளிட்டவற்றுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து நேரிலோ, பதிவு அஞ்சலிலோ அல்லது விரைவு தபாலிலோ அனுப்பிவைக்கலாம். அனைத்து பேரூராட்சி, நகராட்சி, வட்டாரவளர்ச்சி அலுவலகங்களிலும் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்படும். கிராம மற்றும் நகரப் பகுதிகளில் தகுதியானவர்களை தேர்வு செய்திட மாவட்ட ஆட்சியரை தலைமையாக கொண்டு தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பணிகளுக்கு செல்லக்கூடிய 18 முதல் 40 வயதுடைய ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் உடைய பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டம் எதிர்வரும் 24.02.2018 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.