தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா விற்ற கணவன் – மனைவி கைது 6கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

south police station

தூத்துக்குடி முனியசாமிபுரம் மேற்கு பகுதியில்  வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தென்பாகம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், சிலுவை பீட்டர் விமல் என்பவரது என்பவரது வீட்டில்  மறைவாக இருந்த 2 மூட்டைகளை திறந்து பார்தத்தில்  அதனுள் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 260 சிறிய பொட்டலங்களாக 6 கிலோ எடையில் இருந்த கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, வீட்டில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த  சிலுவைபீட்டர் விமல் மற்றும் அவரது மனைவி முத்துலெட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கெனவே கஞ்சா கடத்தல் மற்றும்  கஞ்சா பதுக்கல் ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதே போல,  தூத்துக்குடி, லூர்தம்மாள்புரத்தில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடந்துவருவதாக தாளமுத்துநகர் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, அப்பகுதியில் நடத்திய சோதனையில் பாத்திமா என்பவரது வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். தாளமுத்து நகர் மற்றும் வடபாகம் காவல் நிலையங்களில் இவர் மீது ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது மட்டுமல்லாமல், ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்று வந்தவர்.

”தூத்துக்குடி டவுனில் நடக்கும் பெரும்பாலான குற்றச் செயல்களுக்கு கஞ்சா போதை முக்கிய காரணமாக உள்ளது. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில்  இந்த போதைக்கு அடிமையானவர்களே கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில்  தொடர்ந்து நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை போலீசாரின் தீவிரக் கண்காணிப்பால் தடுத்து நிறுத்த வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!