வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (22/01/2018)

கடைசி தொடர்பு:14:52 (22/01/2018)

``எடப்பாடி ஆட்சி 30 நாள்களில் கவிழும்!" - செந்தில் பாலாஜி ஆரூடம்

 

 

`தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இன்னும் 30 நாள்களில் கவிழும். அவர் சிறைக்குச் செல்வார்' என்று முன்னாள் பாேக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தாெகுதி எம்.எல்.ஏ-வான அவர், ஆர்.கே.நகர் தாெகுதி எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளார். கரூரில் டி.டி.வி.தினகரனை வைத்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பாெதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார்கள். அதற்கான ஆலாேசனைக் கூட்டம் கரூரில் இன்று முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அ.இ.அ.தி.மு.க அம்மா அணி சார்பில் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்பாேது, நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர், `இன்னும் 30 நாள்களில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தமிழகத்தில் கவிழும். அது எப்படி என்பதைப் பாெறுத்திருந்துப் பாருங்கள். ஜெயலலிதா பிறந்தநாள் முன்னதாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். ஜெயலலிதா கனவை சிதைத்து, அ.இ.அ.தி.மு.கவை சிதைத்த அவர் அதன்பிறகு சிறைக்குச் செல்வார். வருகின்ற 29-ம் தேதி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்குபெறுவார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 15 நாள்களில் குக்கர் சின்னம் வாங்கி டி.டி.வி.தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் அபாரமாக வெற்றி பெறுவோம். எடப்பாடி, ஒ.பி.எஸ் அணியினர் டெபாசிட் இழப்பார்கள். மக்களை அல்லல்படுத்தும்விதமாக பஸ் கட்டணத்தை திடீரென்று உயர்த்தியுள்ளார்கள். அதனால், பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்" என்று கூறினார்.