“கனிமொழியின் தாயாருக்காக நானே போராடுவேன்!”- ஹெச்.ராஜா பேட்டி

“கனிமொழியின் தாயார் கோயிலுக்குச் செல்வதை யாரேனும் தடுத்தால், அதற்காக நானே போராடுவேன்" என்று பேசி பரபரப்பைக் கிளப்பினார் ஹெச். ராஜா.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, பாரதிய ஜனதாவின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, இன்று காரைக்குடியிலிருந்து திருமயம் வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தனர். அவற்றுக்கெல்லாம் எப்போதும்போல தனது தனித்துவ பாணியில் பதிலளித்தார். அதில் மிக முக்கியமானது. கனிமொழி பற்றியது.

சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, ``எனது தாயார் கோயிலுக்குச் செல்வதை யாரும் தடுத்தால், அதற்காகவும் போராடுவேன். காரணம், அது எனது தாயாரின் உரிமை. அந்த உரிமையைத் தடுக்கும் உரிமை இங்கு யாருக்கும் இல்லை" என்று பேசியிருந்தார். அந்தப் பேச்சு பல்வேறு தளங்களில் கவனிப்புக்குரியதாகவும் விவாதத்துக்குரியதாகவும் இருந்தது.

கனிமொழி அப்படிப் பேசியதை இன்று ஹெச். ராஜாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சில நொடிகள் யோசித்த ஹெச். ராஜா, 'கனிமொழியின் தாயார் கோயிலுக்குப் போவதை யாரேனும் தடுப்பார்களேயானால், நானே களத்தில் இறங்கிப் போராடுவேன்"என்று பதிலளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!