குட்கா விவகாரம்- `கவுன்ட் டவுன்' ஆரம்பம்...! பலிகடாவாகப்போகும் அதிகாரிகள்

கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தை உலுக்கிய குட்கா விவகாரம் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த முறை சி.பி.ஐ. விசாரணையை நோக்கி  குட்கா விவகாரம் செல்வதால், அதற்கு முன்பே இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயாராகிவருகிறார் என்ற தகவல் இப்போது கோட்டை முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. 
குட்கா விற்பனை மீதான தடைச்சட்டத்தை 2013-ம் ஆண்டு அன்றைய முதல்வரான ஜெயலலிதா 110 விதியின் கீழ் கொண்டுவந்த பிறகு, குட்காவுக்கான தடை தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. குட்கா விற்பனை செய்த கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இதனால் குட்கா பொருள்களுக்கு டிமாண்ட் ஏற்படவே விலை ஏற்றமும் அதிகரித்தது. பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருள்களை கூடுதல் விலைக்கு விற்க ஆரம்பித்தனர். வடநாட்டில் இருந்து வரும் குட்கா பொருள்களுக்கும் கடும் கட்டுப்பாடு நிலவியதால், கடத்தல் முறையில் குட்கா பொருள்களை தமிழகத்துக்குள் கொண்டுவந்தனர் குட்கா வியாபாரிகள். இந்த குட்கா விற்பனையை வெளிமாநிலங்களைச் சேர்நதவர்களே செய்துவந்ததால், அவர்களால் அரசின் நெருக்கடிக்கு தாக்குப்பிடிப்பது கடினமாகிவிட்டது. 

விஜயபாஸ்கர்


ஒருகட்டத்தில் அரசு அதிகாரிகளையும், ஆளும் வர்க்கத்தையும் சரிகட்டினால் மட்டுமே தொழிலை நடத்த முடியும் என்ற முடிவுக்கு வந்த குட்கா வியாபார புள்ளிகள் அதற்கான வேலைகளில் இறங்கினார். அரசு தரப்பை சரிகட்டும் இடைத்தரகர்களை முதலில் சந்தித்தனர். அவர்கள் கொடுத்த நெட்வொர்க்படி அரசின் உயர் பதவிகளில் இருந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து மீண்டும் குட்கா விற்பனையை அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் ஆணையை பெற்றனர்.  இந்த லஞ்சப் பணப்பரிமாற்ற விவகாரம் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்துக்கும் சென்றது. அந்தப் புகாரை கொடுத்தது, அன்றைய போலீஸ் டி.ஜி.பி.யான அசோக்குமார்தான் என்ற தகவலும் வெளியானது. 

அவர் எழுதியக் கடிதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் குறிப்பிட்ட முன்று காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் வரையில் மாதந்தோறும் வாங்குகிற லஞ்சத் தொகை குறித்தும் அதில் சொல்லப்பட்டிருந்த தகவலும் வெளியில் கசிந்தது. டி.ஜி.பி. அசோக்குமார் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்புக்கும் கிடைத்துள்ளதாக சில ஐ.பி.எஸ்.கள் மூலம் முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்குப் போகவே டி.ஜி.பி. அசோக்குமார், கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  அசோக்குமாரின் கடித விவகாரம் பெரிதாகக் கிளம்பி, பின்னர் அதே வேகத்தில் அமுங்கியும் போய்விட்டது. பழைய டி.ஜி.பி. அசோக்குமார், ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியதாக சொல்லப்பட்ட விவகாரம் மறப்பதற்குள் ஜார்ஜ் எழுதியதாக  ஒரு கடிதம் சுற்ற ஆரம்பித்தது. அந்தக் கடிதத்தில் முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் உள்ளிட்ட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயரை, ஜார்ஜ் எழுதி இருந்ததாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பைப் பற்ற வைத்தது. இரண்டு ஐ.பி.எஸ்.கள் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதங்களுக்கே விடை கிடைக்காத சூழ்நிலையில் மூன்றாவது சுற்றலாக ஒரு டைரியின் சில பக்கங்கள் வெளியானது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம்- ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில ஐ.பி.எஸ்.களுக்கு மாதந்தோறும் கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும் பக்கங்கள் வெளியானது. 

இந்தக் கடிதம் குட்கா அதிபர் மாதவராவ் என்பவரின் டைரியில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம் என்று தகவல்கள் வெளியானது. இந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இருப்பதால், இந்த விவகாரத்தை அமுக்குவதற்கு ஆளும் தரப்பு தயாராகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், “மாதவராவ் யார் என்றே எனக்குத் தெரியாது” என அப்போது விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து தன்னிலை விளக்கமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில்தான், "குட்கா விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதால், அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதே வேளையில்  அமைச்சர்மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு "மேலிட" ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஸ்டாலின்குட்கா விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில்தான் தி.மு.க -வைச் சேர்ந்த திருவல்லிகேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ``குட்கா விவாரத்தில் சி.பி.ஐ.விசாரணை வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் வருமானவரித்துறை சார்பில் அஃபிடவிட்  ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ``குட்கா அதிபர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் அந்த ஆவணங்களில் இருந்துள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர், அப்போதைய சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுக்கு மாதவராவ் பணம் கொடுத்த விஷயம் அதில் இருந்துள்ளது. மேலும், முன்னாள் டி.ஜி.பி அசோக்குமார் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தின் நகலும் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியது” என்று அந்த அஃபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியாக குட்கா விஜயபாஸ்கர் என்றே அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து வருகிறார். ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பரிமாற்றத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு அளித்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்டதால் இடைத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது. 

பழனிசாமிஇந்நிலையில்தான், குட்கா விவகாரத்தில்  தமிழக அரசின்  முதற்கட்ட நடவடிக்கையாக, உயர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடமாற்றம், காத்திருப்போர் பட்டியலில் வைப்பு முதல் நடவடிக்கையாகவும் துறை ரீதியிலான விசாரணை அடுத்தகட்ட நகர்வாகவும் முதல்வர் மேற்கொள்ள உள்ளதாக அந்தத் தகவல் உறுதிப்படுத்துகிறது. டி.ஜி.பி. அந்தஸ்து மற்றும் இணை, துணை, உதவி போலீஸ் கமிஷனர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் 23 பேர் குட்கா லஞ்சத் தொடர்பில் இருப்பதாகக் கருதப்படுவதால், முக்கிய சில அதிகாரிகளை மட்டும் இப்போது காவு கொடுக்க அரசு தயாராகிவிட்டது என்கிறார்கள். முக்கிய அதிகாரிகள் சிலரின் பதவிகள் இன்னும் சில தினங்களில் பறிக்கப்பட உள்ளன. மேலும், முன்னாள் சென்னை ஆணையாளர் ஜார்ஜிடமும் விசாரணை நடத்த அவருக்கு எதிரான அணியினர் முதல்வரிடம் துாபம் போட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாகரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்கிறார்கள். ``போலீஸார்மீது நடவடிக்கை எடுத்து தற்போது இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முதல்வர் திட்டமிடுகிறார். அதற்கான கோப்புகள் தயாராகிவருகின்றன. விரைவில் அறிவிப்பு வரும் பாருங்கள் என்கிறார்கள்” காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிலர். குட்கா விவகாரம் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் அனலை கிளப்பப் போவது மட்டும் நிச்சயம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!