பணியில் சேர்ந்த 89 நாளில் ராஜினாமா? லீவு கொடுக்காததால் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி

சென்னை, சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் பாஸ்கரன். ‘மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவரை உடனிருந்து பார்த்துக்கொள்வதற்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் விடுப்பு கொடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக, எனது பணியை ராஜினாமாசெய்கிறேன்’ என அவர் ராஜினாமா கொடுத்திருப்பதாக, இன்று காலை தகவல் பரவியது. இது, காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிட்லபாக்கம் காவல் நிலையம், மன உளைச்சல்

திருவான்மியூரில் உள்ள வைரமுத்து வீட்டில், நேற்று பாதுகாப்புப் பணியில் இருந்தார், சிட்லபாக்கம் ஆய்வாளர் ரமேஷ். அந்த நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்த உதவி ஆய்வாளர் பாஸ்கரன், தனது ராஜினாமா கடிதத்தை இன்ஸ்பெக்டர் மேஜைமீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது, இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தகவல் தெரிவித்திருக்கிறார். 'எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம்' என பாஸ்கரன் கூறியிருக்கிறார். இன்று காலையிலிருந்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் செல்போன் மூலமாக பாஸ்கரனை பலமுறை தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால் அவர் எடுக்கவே இல்லை.

இதுகுறித்து, காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். “1986-லிருந்து காவல் பணியில் இருக்கிறார். சிட்லபாக்கத்தில் பணிக்கு சேர்ந்து 89 நாள்கள்தான் ஆகிறது. அதில், 23 நாள்கள் மருத்துவ விடுப்பில் இருந்திருக்கிறார். இதற்கு முன்பு மணலி, துறைமுகம், கொத்தவால்சாவடி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியிருக்கிறார். பாஸ்கரன் விடுப்பு தொடர்பாக வதந்தியைக் கிளப்பிவிடுகிறார்கள். அவர், விடுப்புக் கடிதம்தான் எங்களுக்கு அனுப்பியிருக்கிறார். நாங்கள் அவருக்கு விடுமுறை கொடுத்துள்ளோம். இது, தவறாகப் பரவிவருகிறது” எனத் தெரிவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!