`வாலிபரை உசுப்பேத்திய `அந்த' வார்த்தைகள்' - அ.தி.மு.க எம்.எல்.ஏ மூக்கை உடைத்த பின்னணி

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அ.தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் மூக்கை வாலிபர் ஒருவர் உடைத்தது எதனால் என்பது குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கலசப்பாக்கம் அ.தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், நேற்று இரவு போளூர் நகரச் செயலாளர் பாண்டுரங்கன் மகன் திருமண வரவேற்புக்காகப் போளூரில் உள்ள ராஜபிரியா திருமண மண்டபத்துக்குச் சென்றபோது மண்டப வாசலிலேயே வாலிபர் வசந்தமணி என்பவர் எம்.எல்.ஏ-வை முகத்தில் குத்துவிட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் எம்.எல்.ஏ நிலைகுலைந்துபோனார். குத்துவிட்ட வசந்தமணியை எம்.எல்.ஏ-வின் ஆட்கள் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தபோது, நான்கு நாள்களுக்கு முன்பு கலசப்பாக்கத்தில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், பிரமாண்ட மேடை அமைத்து எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடினர். எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கான விழா மேடை போளூரைச் சேர்ந்த வசந்தமணி என்பவர் அமைத்தார். மேடை அமைக்கும்வரை வசந்தமணியிடம் அன்பாகப் பேசிவந்த எம்.எல்.ஏ, மேடை அமைத்ததுக்கான பணத்தை வசந்தமணி கேட்டவுடன் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். `பணமெல்லாம் தர முடியாது  எம்.எல்.ஏ-கிட்டயே பணம் கேட்கிறாயா உன்ன தொலைச்சுடுவன் போடா' என மிரட்டியிருக்கிறார். திரும்பவும் நான்கு ஐந்து முறை வசந்தமணி, 'மேடை அமைத்ததுக்கான பணத்தைக் கொடுத்துவிடுங்கள்' எனக் கேட்டுள்ளார்.ஆனாலும், பணம் தராததால் கோபமடைந்த வசந்தமணி, நேற்று இரவு போளூரில் உள்ள எம்.எல்.ஏ-வின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு எம்.எல்.ஏ இல்லாததால் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு வந்துள்ளார். எம்.எல்.ஏ, போளூர் நகரச் செயலாளரின் மகன் திருமண வரவேற்புக்கு வருவதை உறுதி செய்துகொண்டு கல்யாண மண்டபத்துக்கு வந்து வாசலிலேயே இருந்துள்ளார். எம்.எல்.ஏ, மண்டப வாசலில் காரிலிருந்து இறங்கியதும் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது எம்.எல்.ஏ-வின் ஆட்கள் வெடியை ஃபோக்கஸ் செய்ய, வாசல் ஓரமாக மறைந்திருந்த வசந்தமணி கண் இமைக்கும் நேரத்தில் ஓடிவந்து எம்.எல்.ஏ-வின் முகத்தில் குத்துவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி கடுமையாகவும் தாக்கியுள்ளார். சுதாரித்துகொண்ட எம்.எல்.ஏ-வின் ஆட்கள் வசந்தமணியைத் தடுத்து அவரை அடித்து உதைத்து போலீஸுக்குப் போன் செய்துள்ளனர். அங்குவந்த போளூர் காவல்துறையினர் வசந்தமணியைக் கைது செய்தனர்.

இதுகுறித்து சில அ.தி.மு.க-வினரோ இது மேடைக்காகப் போட்ட சண்டை இல்லை. அங்கன்வாடி போஸ்ட்டிங் இரண்டு நாளுக்கு முன்பு போடப்பட்டது. அங்கன்வாடி பணிக்கு வேலை வாங்கி தருவதாக எம்.எல்.ஏ பலபேரிடம் பணம் வாங்கினார். ஆனால், அதில் பாதிபேருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால்கூட எம்.எல்.ஏ-வை தாக்கியிருக்கலாம் என்றனர். பா.ம.க-வில் இருந்து வந்த வசந்தமணி தற்போது அ.தி.மு.க-வில் சேர்ந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!