“மக்களையும் எங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார் எடப்பாடி!” - சீறும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்

 

                                    அரசு பேருந்துகள்

பொங்கலுக்கு முன் தொழிலாளர் பிரச்னைக்கான தலைப்புச் செய்தியாக இருந்த போக்குவரத்துக் கழகம், பொங்கலுக்குப் பின் பொதுமக்கள் பிரச்னைக்கான தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. கட்டண உயர்வு என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுப் பலரையும் அழவைத்துள்ளது தமிழக அரசு. “புதிய பேருந்துகள் வாங்குதல், எரிபொருள் செலவு, பணியாளர் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது” என்று காரணம் கூறியிருக்கிறது அரசு. ஆனால், இந்தக் காரணங்களைச் சொல்ல முடியாமல், பயணிகளின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள். “பயணிகளுக்குப் பதில் சொல்லிச்சொல்லியே தொண்டை கட்டிடுச்சு” என்று புலம்பித் தீர்க்கிறார்கள் நடத்துநர்கள்.

இந்த நிலையில், “இது கட்டண உயர்வு அல்ல... கட்டணக் கொள்ளை” என்கிற குரல்களும் கேட்கின்றன. வழக்கம்போல இப்படித்தான் குரல் கொடுப்பார்கள் என்று நீங்கள் கடந்துபோகிறவர் என்றால், ப்ளீஸ் ஹோல்டேன்! சென்னை மாநகரப் பேருந்துக் கட்டண உயர்வைக் கொஞ்சம் இங்கே கணக்குப் போட்டுப் பார்த்துள்ளோம். அதைப் பார்த்துவிட்டு, பிறகு முடிவெடுங்கள்.

மாநகரப் பேருந்துக் கட்டணம், சாதாரண பேருந்துகளில் (ஒயிட் போர்டு) 3 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம், தற்போது 5 ரூபாயாகவும், 14 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம், 23 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல எக்ஸ்பிரஸ் (க்ரின் போர்டு), டீலக்ஸ் (எலெக்ட்ரானிக் போர்டு) பேருந்துகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், அவை முறையாக இல்லாமல் தாறுமாறு தக்காளிச்சோறு கதையாக இஷ்டம்போல உயர்த்தப்பட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அதிலும் ஸ்டேஜ் என்கிற பெயரில் பெரும் கொள்ளையில் இறங்கியிருக்கிறது மாநகரப் போக்குவரத்துக் கழகம். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை, ஒரு ஸ்டேஜ் (நிலை) என்பது சுமாராக 2 கி.மீ. என கணக்கிடப்படுகிறது. ஆனால், உண்மையில் ஒவ்வொரு கி.மீட்டரையும் ஒரு ஸ்டேஜ் என்பதுபோலக் கணக்குப்போட்டிருப்பதோடு அல்லாமல், கைக்கு வந்தபடியெல்லாம் கணக்குப் போட்டு கொள்ளையடித்திருக்கிறது மாநகரப் போக்குவரத்துக் கழகம். 

உதாரணத்துக்கு... வடபழனி பேருந்து நிலையத்திலிருந்து டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்துக்கான தூரம் 6.2 கி.மீட்டர். இதை 7 கிலோ மீட்டர் என்றே எடுத்துக்கொள்வோம். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் ஸ்டேஜ் கணக்கின்படி இது மொத்தம் 4 ஸ்டேஜ்களாக வரவேண்டும். அதாவது, இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு ஸ்டேஜ் என்கிற விகிதத்தில் பார்த்தால் இப்படி வரவேண்டும். இதன்படி பார்த்தால், சாதாரண பேருந்தில் (ஒயிட் போர்டு) குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய். 2-வது ஸ்டேஜுக்கு 6 ரூபாய், மூன்றாவது ஸ்டேஜுக்கு 7 ரூபாய், நான்காவது ஸ்டேஜுக்கு 7 ரூபாய். ஆக, வடபழனியிலிருந்து டி.வி.எஸ். பேருந்து நிறுத்தம்வரை 7 ரூபாய் வசூலிக்க வேண்டும்.

இதுவே எக்ஸ்பிரஸ் (க்ரீன் போர்டு) என்று சொல்லப்படும் பேருந்துகளுக்குக் குறைந்தபட்ச கட்டணம், 8 ரூபாய் (ஒயிட் போர்டுபோல ஒன்றரை மடங்கு கட்டணம்). இரண்டாவது ஸ்டேஜுக்கு 9 ரூபாய். மூன்றாவது ஸ்டேஜுக்கு 10 ரூபாய், நான்காவது ஸ்டேஜுக்கும் 10 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் 13 ரூபாய். அதாவது, ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தைவிட 5 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர். அதாவது 62.5 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கின்றனர். 

ஸ்டேஜ் என்பதை ஒரு கிலோ மீட்டருக்கு ஒன்று என்று மாற்றிக் கணக்கிட்டால், வடபழனியிலிருந்து 7-வது ஸ்டேஜ் என்கிற வகையில் வருகிறது டி.வி.எஸ். பஸ் ஸ்டாப். இதன்படி பார்த்தால் இரண்டாவது ஸ்டேஜுக்கு 9 ரூபாய், மூன்றாவது மற்றும் நான்காவது ஸ்டேஜ்களுக்கு 10 ரூபாய், ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது ஸ்டேஜ்களுக்கு 11 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், கூடுதலாக 2 ரூபாய் வசூலிக்கின்றனர். ஆக, ஒரு டிக்கெட்டுக்கு அவர்களுடைய கணக்குப்படி பார்த்தாலே மூன்று ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர். 1 கிலோ மீட்டருக்கு ஒரு ஸ்டேஜ் என்று கணக்கிட்டாலும் 11 ரூபாய்தான் வருகிறது. இதன்படி பார்த்தாலும் கூடுதலாக 2 ரூபாய் வசூலிக்கின்றனர்.

இப்படி கணக்குப்போட்டுப் பார்த்தால், எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை சில இடங்களில் நூறு சதவிகிதம்கூட வருகிறது. உதாரணத்துக்கு வேளச்சேரியிலிருந்து டி.வி.எஸ். பஸ் நிறுத்தத்துக்கு டீலக்ஸ் பேருந்தில் பழைய கட்டணம் 13 ரூபாய். தற்போது இது 25 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட நூறு சதவிகிதம்.

                                சிஐடியு

கிண்டியிலிருந்து வழக்கமாக 9 ரூபாய் கொடுத்து டி.வி.எஸ். வந்து இறங்கிக் கொண்டிருந்தவர், இன்று கூடுதலாக 10 ரூபாய் கொடுத்து பயணிக்க வேண்டியிருக்கிறது. அதாவது, மொத்தம் 19 ரூபாய் வாங்கியுள்ளனர். இடையில் மொத்தம் 8 நிறுத்தங்கள் உள்ளன. இது, அத்தனையையுமே ஸ்டேஜ் என்று கணக்கிட்டாலும்கூட, எட்டாவது ஸ்டேஜுக்கு தற்போதைய கட்டணப்படி 12 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும். ஆனால், இங்கே கூடுதலாக 7 ரூபாய் வசூலித்துள்ளனர். 

இதுதொடர்பாக, போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டுறவுத் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது, ‘'மார்கெட்ல காலையில போய் மீன், காய்கறி வியாபரம் செய்யுற பெண்கள்ல பலரும் கையில கட் அண்ட் ரைட்டா சரியான சில்லறையோட வர்றவங்கதான் நிறைய பேரு இருக்காங்க. அவுங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க? 'இன்னிக்கு நைட்டுல இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது'னு சொன்ன பிரதமர் மோடிக்கும், 'காலை 4 மணியிலேருந்து பேருந்துக் கட்டணம் உயர்வு'னு முதல் நாள் ராத்திரி சொல்லுற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? 

பட்ஜெட் கூட்டத்தொடர் இனிமேதான் வரப்போகுது. உட்கார்ந்து ஆலோசனை பண்ணி உயர்த்தவேண்டிய கட்டணத்தை, இப்படித் திடீர்னு ஏத்துனா... சமான்யர்கள் என்ன பண்ணுவாங்க? பெட்ரோல் டீசல் விலை உயர்வாலதான் கட்டண உயர்வுனு சொல்றது எல்லாம் சும்மாங்க. 19-ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தொடருக்கு அமைச்சர் ஜெயக்குமார் போயிட்டு வந்துருக்காரு. பெட்ரோல், டீசல் ரெண்டையும் ஜி.எஸ்.டி வரிக்குக் கீழே கொண்டுவர சொல்லியிருக்கலாமே. ஜெயலலிதா இருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தா, மத்திய அரசுக்கு எதிரா கண்டன அறிக்கை வரும். கடந்த 2, 3 மாதங்கள்ல பெட்ரோல், டீசல் விலை கடுமையா உயர்ந்திருக்கு. ஒரு கண்டன அறிக்கையாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமிகிட்ட இருந்து வந்திருக்கா? 

எங்க தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சண்டைய ஏற்படுத்துறதுக்கான சதிதான் இந்த அதிரடி கட்டண உயர்வு. இன்னிக்கு காலையிலேருந்து பஸ் ஏறுன முக்கால்வாசி பயணிகள், நடத்துநர்களோட வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்காங்க. இது தொடர்ந்துகிட்டே இருக்கு. இதுக்கு பயந்தே சில தொழிலாளர்கள் இரண்டு நாளா வேலைக்குப் போகல. 

ஸ்டேஜ் கணக்கெல்லாம் தாறுமாறா போட்டுத்தான் கட்டணத்தை உயர்த்தியிருக்காங்க. இதையெல்லாம் இப்படி உடனடியா கணக்குப் போட்டுச் சொல்ல முடியாது. ஆனா, கொள்ளையடிக்கிறது என்னவோ உண்மை. டீலக்ஸ் பஸ்ல 41 ரூபாய் வர உயர்ந்திருக்கு. குறைஞ்சபட்ச கட்டணத்துல இயங்கிக்கிட்டிருந்த ஒயிட் போர்டு வண்டிகளைச் சுத்தமா குறைச்சிட்டாங்க. எல்லாத்தையும் கொள்ளயடிக்குறதுக்காவே டீலக்ஸா மாத்திகிட்டு வர்றாங்க. அரசு சொல்ற மாதிரி 20 சதவிகிதம் முதல்  54 சதவிகிதம் கட்டண  உயர்வு இல்ல. 55 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் உயர்வுனே சொல்லலாம். கொள்ளையடிக்கறதுக்கான நடவடிக்கைதான் இது” என்று கொதித்தார் கிருஷ்ணமூர்த்தி.

ஊழியர்களின் சம்பளத்துக்காகத்தான் கட்டண உயர்வு என்று அரசு சொன்னாலும், எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வை ஈடுகட்டத்தான் இந்த டிக்கெட் விலை உயர்வு என்று சோசியல் மீடியாவில் தமிழக அரசை வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள். தொலைக்காட்சி விவாதங்கள், பொதுமக்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அனைவரும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிரான கருத்துகளையே பதிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். மறுபரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!