வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (22/01/2018)

கடைசி தொடர்பு:17:25 (22/01/2018)

தினகரன் அணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்! உயர் நீதிமன்றம் புது உத்தரவு

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வைரவன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், 'எம்.ஜி.ஆரின்  101- வது பிறந்தநாளை முன்னிட்டு, திருமங்கலம்  திடலில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் வரும் 21-ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக் கோரி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருமங்கலம் டி.எஸ்.பி ஆகியோரிடம் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் மனு அளித்தேன். மனு தொடர்பாக எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஜனவரி 16-ம் தேதி, திருமங்கலம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தபோது, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். எனவே, பொதுக்கூட்டத்துக்கு அமைதி வழங்கவும், போலீஸார் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என  கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா  ஆகியோர்கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், 'அனுமதி கோரப்பட்டுள்ள பகுதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. அருகில் பள்ளிகள் இருப்பதால், அங்கு பொதுக்கூட்டம் நடத்த  அனுமதிக்க இயலாது' எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவ்வாறெனில் ராஜாஜி சிலை அருகே வரும் 27-ம் தேதி விழாவை நடத்த அனுமதிக்குமாறு கோரினர். இதை ஏற்ற நீதிபதிகள், ராஜாஜி சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, நாளை காவல்துறையினரிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர். மேலும், 27-ம் தேதி நடைபெறும் விழாவுக்கு அனுமதி வழங்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.