`தயவுசெய்து அதைத் தவிர்த்துவிடுங்கள்' - இயக்குநர் மகேந்திரனுக்குத் தடைபோட்ட செவிலியர்

புதுக்கோட்டை நகரில் கடந்த ஒரு வாரமாக, கரு.பழனியப்பன் இயக்கும் 'புகழேந்தி எனும் நான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், அருள்நிதி ஹுரோவாகவும் அவருக்கு இயக்குநர் மகேந்திரன் தந்தையாகவும் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (21-ம் தேதி) நடித்துக்கொண்டிருந்த இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரை உடனடியாகப் புதுக்கோட்டை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முதலில் உணவு ஒவ்வாமைக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது. பிறகு, மகேந்திரனுக்கு சிகிச்சை அளித்த இருதய சிகிச்சை மருத்துவரான நிஜாமுதீன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மகேந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு ஐ.சி.யு-வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்திருக்கிறார். தற்போது அவர் உடல்நிலை தேறி வருகிறார்" என்றார்.

இந்தச் சூழலில், மறுநாள் பேசும் நிலைக்கு முன்னேறிய மகேந்திரனிடம், "பத்திரிகையாளர்கள் உங்களைச் சந்திக்க வேண்டும் என்று நேற்றிலிருந்து காத்திருக்கிறார்கள்" என்று படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்கள். உடனே மகேந்திரன், "அவர்களைச் சந்தித்துப் பேச பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் வருகிறேன்" என்று ஆர்வம் பொங்கும் குரலில் கூறியிருக்கிறார். அவரைக் கவனித்துக்கொள்ளும் செவிலியர், மகேந்திரன் சொன்னதைக் கேட்டு, "சார், உங்கள் உடல்நிலை இருக்கும் தற்போதைய நிலையில், முழு ஓய்வு தேவை. இந்த நிலைமையில், நீங்கள் பிரஸ்மீட்டில் பேசுவதை நான் அனுமதிக்க முடியாது. தயவுசெய்து அதைத் தவிர்த்து விடுங்கள்" என்று உறுதியாகக் கூறி இருக்கிறார். மகேந்திரனும் நிலைமையைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டார். மக்களின் மனதை வெகுவாகக் கவர்ந்த மூத்த இயக்குநரின் பேட்டியின் மூலம் அவரின் உடல்நலம் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவித்துவிடலாம் என்று காத்திருந்த ஊடக, பத்திரிகைச் செய்தியாளர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!