யு.ஜி.சி தேசிய தகுதித் தேர்வு முறையில் புதிய மாற்றங்கள்!

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்கான யு.ஜி.சி தேசிய தகுதித் தேர்வு (National Elegibility Test - NET) முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது இடைநிலை கல்வி வாரியம் (CBSE). இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறது. 

தேசிய தகுதித் தேர்வு


ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேசிய தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர்வில் பொது அறிவைச் சோதிக்கும் வகையில் முதல் தேர்வும் சம்பந்தப்பட்ட துறை பாடங்களின் அறிவைச் சோதிக்கும் வகையில் இரண்டு தேர்வும் நடைபெறும். 

மூன்று தாள்கள் கொண்ட தேர்வை இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாக மாற்றி இருக்கிறது இடைநிலை கல்வி வாரியம். முதல் தாளில் பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த 50 கேள்விகளும் இரண்டாவது தாளில் சம்பந்தப்பட்ட பாடங்களிலிருந்து 100 கேள்விகளும் கேட்கப்படும். முதல் தாளில் 60 கேள்விகள் கேட்கப்பட்டு 50 கேள்விகளுக்கு விடையளித்தால் போதும் என இருந்தது. தற்போது, 50 கேள்விகள் மட்டும் கேட்கப்படும். 50-க்கும் பதிலளிக்க வேண்டும் என மாற்றி இருக்கிறது. 

தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு, முனைவர் ஆய்வை மேற்கொள்ள உதவியாக இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். இந்த உதவித்தொகையைப் பெற வயது வரம்பு 28 என இருந்ததை 30 வயது வரை என உயர்த்தப்பட்டிருக்கிறது. இது பொது பிரிவினருக்கானது. மற்ற பிரிவினருக்கு வழக்கம்போல் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் வயது வரம்பு விலக்கு உண்டு. 

இந்த ஆண்டு தகுதித் தேர்வு ஜூலை 8-ம் தேதி நடைபெறும். இதற்கான விண்ணப்பம் மார்ச் மாதம் 6-ம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது இடைநிலை கல்வி வாரியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!