பழங்குடி மக்களுடன் இணைந்து போராடிய ஆர்.நல்லகண்ணு!

நல்லகண்ணு

ழங்குடி மக்களுக்குத் தனித்துறை வேண்டியும் பழங்குடி வாரியத்தில் சமூகநீதி வேண்டியும் குருமர் போன்ற பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் முறையாக வழங்கபட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் சமூகநீதி பேரவையின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கலாசார உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன சிறப்புரை ஆற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, “பல்லாண்டு காலமாகக் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். பூர்வ குடிமக்களை விரட்டி அடித்துவிட்டு புதிய கம்பெனிகளை அமைத்து வருகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்படும் பழங்குடி மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து அவர்களுக்கான உரிமைகளை அதிகாரபூர்வமாக அளிக்க வேண்டும். அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ்கள் முறையாகக் கொடுக்கப்படாமல் மறுக்கப்படுகிறது. எனவே, அவர்களால் எந்தப் பள்ளியிலும் சேர்ந்து கல்வி பயில முடியவில்லை. அவர்களுக்கான அங்கீகாரத்தை முறைப்படுத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு ஆராய்ச்சியின் அறிக்கை முடிவுகளை வெளியிட வேண்டும். அதை வெளியிட்டால்தான் குருமர் இனத்து மக்களின் அடையாளம் வெளியில் வரும்” என்று தெரிவித்தார்.

அரசுப் பேருந்து போக்குவரத்தின் கட்டண உயர்வை பற்றி கேட்டபோது, “இந்தக் கட்டண உயர்வு நியாயமானதல்ல. மக்கள் வசதியாகச் சென்று வருவதற்குப் பயன்படுகின்ற இந்தப் போக்குவரத்துத்துறை என்பது ஒரு சேவை போன்றது. இதை விடுத்து லாபம் தரக்கூடிய தொழிலாக மாற்றுகின்றனர். கேட்டால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்கிறார்கள். இப்படி சொல்லக்கூடியவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 55,000 ரூபாயிலிருந்து  1,05,000 ரூபாயாக ஊதியத்தை உயர்த்தியுள்ளனர். இது அவர்களுக்குச் செலவாகத் தெரியவில்லை. இந்தக் கட்டண உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்தப் போக்குவரத்துக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்” என்று கூறினார்.

``எங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து நகர்ப்புறங்களில் இடம் பெயரச் செய்தார்கள். அவ்வாறு இடம் பெயர்ந்து இங்கு வந்தால் எங்களுக்கான அங்கீகாரத்தைத் தர மறுத்து எங்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றார்கள்” என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் தெரிவித்திருந்தார். பழங்குடி மக்கள் தங்களின் கலாசாரத்தை நினைவுபடுத்த வெறும் உடம்பிலும் கம்பளி அணிந்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!