வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (22/01/2018)

கடைசி தொடர்பு:08:09 (23/01/2018)

கொங்குத் தமிழில் கொஞ்சிய மக்கள்... சமத்துப் பிள்ளையாய் வழிவிட்ட காட்டு யானை...!

பொதுவாக யானைகள் ஊருக்குள் வந்தாலோ, வழியை மறித்தாலோ, மக்கள் கத்துவார்கள், கூச்சலிடுவார்கள், வாகனத்தை முறுக்கிக் கொண்டு ஹாரன் அடிப்பார்கள், டார்ச் அடிப்பார்கள் சிலர் கற்களைக் கொண்டுகூட எறிவார்கள். ஆனால், கோவையில் சாலையை மறித்த காட்டு யானையை, கொங்குத் தமிழில் கொஞ்சி அனுப்பியுள்ளனர் கோவை மக்கள்.

யானை

கோவை மாவட்டம், காரமடை அருகே பில்லூர் டேம் உள்ளது. இதைச் சுற்றி ஏராளமான சிறு கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியையொட்டி இருப்பதால் யானைகளும் ஹாயாக வலம் வந்துகொண்டிருக்கும். இந்நிலையில், கோவை காரமடையிலிருந்து பில்லூருக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. அப்போது, காட்டு வழியே போய்க் கொண்டிருந்தபோது, ஓர் ஆண் காட்டு யானை பேருந்தின் குறுக்கே வந்தது.

ஆனால், யானையைக் கண்டு மக்கள் பதறவோ, சிதறவோ இல்லை. தங்களுக்கே உரிய கொங்குத் தமிழில், "போய்டு ராஜா… வழிவிடு ராஜா… குழந்தைங்க எல்லாம் இருக்காங்க சாமி…. பயப்படுத்தாதீங்க… உங்கக் கோவத்த இங்கக் காட்டாதீங்க சாமி...  வழிவிடுங்க பிள்ளையாரப்பா... " என்று பேருந்தில் இருந்தவர்கள் கொஞ்சிப் பேசவே, காட்டு யானை சமத்துப் பிள்ளையாக காட்டுக்குள் சென்றது. இதையடுத்து, நிம்மதி பெரு மூச்சுவிட்டபடி, பேருந்தும் புறப்பட்டுச் சென்றது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.