வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (23/01/2018)

கடைசி தொடர்பு:10:26 (23/01/2018)

``அர்ஜுன் சம்பத்தை சங்கராச்சாரியாராக அறிவிக்க வேண்டும்!"- முதல்வருக்கு தமிழ்ப் புலிகள் கடிதம்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை, அடுத்த காஞ்சி சங்கராச்சாரியாராக அறிவிக்கக்கோரி, தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பாக முதல்வருக்கும் காஞ்சி மடத்தலைவருக்கும் மனு அனுப்பப்பட்டது. 

காஞ்சி மடத்தில் தற்போது சங்கராச்சாரியராக இருப்பவர் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழ்ப்புலிகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அர்ஜுன் சம்பத் முகமூடி அணிந்தும், அம்பேத்கர், பெரியார் படங்களை கைகளில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து, புகழ்பெற்ற காஞ்சி மடத்துக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் இருப்பதால், சங்கராச்சாரியார் பதவிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை நியமிக்க பரிந்துரை செய்ய வேண்டி, தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பாக காஞ்சி சங்கர மடத்திற்கும், தமிழக முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பினர். இந்து மறுப்பாளரையோ அல்லது கடவுள் எதிர்ப்பாளாரையோ  சங்கராச்சாரியராக நியமிக்க வலியுறுத்தவில்லை எனவும், சாதி கடந்து இந்துக்களுக்காகவே பாடுபட்டு வரும் அர்ஜுன் சம்பத்தையே, அடுத்த சங்கராச்சாரியராக அறிவிக்க வலியுறுத்திதான் கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழ்ப் புலிகள் கட்சியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அர்ஜுன் சம்பத் கூறுகையில், ``சங்கர மடம் என்பது ஆதிசங்கராச்சாரியரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பீடம். அதில் மடாதிபதியாக வேண்டும் என்றால் பல்வேறு விதமான ஆன்மிக பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டு, பின்னர் ஜாதகம் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். நான் ஒரு கிரகஸ்தன். இந்து சமூகத்துக்குச் சேவை செய்யும் ஒரு தொண்டன். எனவே, என்னை  காஞ்சி மடத்தின் மடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்பது விஷமத்தனமான கோரிக்கை.

காஞ்சி மடத்துக்கு யாரை மடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்று பெரியவர்களுக்குத் தெரியும். அதைப்பற்றி திராவிடர்களின் அறிவுரை வேண்டாம். முதலில், இவர்கள் திராவிடத்தில் இருக்கும் வாரிசு அரசியலை சரிசெய்யட்டும். இங்கு உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியிலனத்தைச் சேர்ந்த திராவிட இயக்கத் தொண்டர்களை மேலிடத்துக்குக் கொண்டுவரட்டும். இதெல்லாம் இந்து ஒற்றுமையை சீர்குலைக்கச் செய்யும் செயல். அதை நாங்கள் முறியடிப்போம்" என்றார்.