“அடித்தட்டு மக்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வு!“- சீமான் ஆவேசம்

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஜனவரி 25 -ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பரமக்குடியில் சீமான் தெரிவித்தார்.

பரமக்குடியில் சீமான் பேட்டி

பரமக்குடியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம்  பேசிய அவர் ''தமிழகத்தில் +2 முடித்த மாணவர்களுக்கு  மருத்துவ படிப்பிற்காக நீட் நுழைவு தேர்வு எழுத இந்தியா முழுவதற்கும் ஒரே படிப்பு  ஒரே கேள்வி பதில் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில மொழி, கலாச்சாரம், பண்பாடுகள் என தனித்தனி வரலாற்று பின்னணி உண்டு.  இந்நிலையில்  இதில் ஒரே பாடம் படி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீட் தேர்வின் மூலம்  தான் தரமான மருத்துவரை உருவாக்க முடியும் என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். நீட் தேர்வு எழுதி வரும் மாணவர்களுக்கு பாடம் நடத்துபவர்களும், ஏற்கனவே உள்ள மருத்துவர்களும் மாநில மொழிப் பாடங்களில் படித்துள்ள தரமான மருத்துவர்கள் தானே. அப்படி இருக்க நீட் தேர்வுக்கான அவசியம் என்ன?

 அரசு போக்குவரத்து கழகங்களில் நிர்வாகச் சீர்கேட்டால் ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் முறைகேடாக கையாளப்பட்டுள்ளது. இதனைக் காரணமாகக்  கூறி அடித்தட்டு மக்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வு என்பது மக்களால் ஏற்க முடியாது. எனவே பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஜனவரி 25 -ம் தேதி தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்து விட்டார் .ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் குறித்து பேசுபவர்கள் 95 வயதிலும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் தாயாரை பற்றி அவதூறாகப் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் அதுவே மனித மாண்பு, ஒரு செயலுக்கு வருத்தம் தெரிவித்த பின்பாக அது முடிந்து போனது. மீண்டும் மீண்டும் அது குறித்து பேசுவதென்பது வெட்டி வேலை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!