வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (23/01/2018)

கடைசி தொடர்பு:10:10 (23/01/2018)

`ஒரு குடம் தண்ணீர் ரூ.12..!' - காலிக்குடத்துடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

குடி தண்ணீர் கேட்டு, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கையில் குடத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மறவன்மடம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அந்தோணியார்புரம். இதில், 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதிக்கு, ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் இருந்து, பெருங்குளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், குடிதண்ணீர் வழங்கப்பட்டுவந்தது.  

கடந்த,  சில ஆண்டுகளாக இந்தப் பகுதிக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் ஊர்மக்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, துாத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பின், அந்தோணியார்புரத்துக்கு குடிதண்ணீர் சரிவர வரவில்லை. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பல போராட்டங்களுக்குப் பின்னும் மறவன்மடம் நெடுஞ்சாலையில் 3 குடி தண்ணீர் குழாய் தற்காலிகமாக அமைத்துக் கொடுக்கப்பட்டது. 

அந்த குடிநீர் குழாய்களிலும் தற்போது சரிவர தண்ணீர் வருவது இல்லை. இரண்டு குடம் குடிதண்ணீருக்காக, பெண்கள், 1 கி.மீ முதல் 2 கி.மீ  துாரம் வரை நடக்க வேண்டியுள்ளது என வேனையுடன் கூறுகின்றனர் ஊர்மக்கள். 

ஊருக்குள் தனியார் தண்ணீர் வண்டிகளில் கொண்டு வந்து விற்கப்படும் குடிநீரும், குடம், 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் அன்றாடம் தொழில் செய்பவர்களே. ஒரு குடம் 12 ரூபாய் கொடுத்து வாங்குவதால், தண்ணீருக்கே ஒரு தொகை மாதம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வருடம் துாத்துக்குடியில் பரவலாக மழை பெய்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில், தங்கள் பகுதிக்கு மட்டும் தண்ணீர் வராததைக்கண்டித்தும், அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த, 100க்கும் அதிகமான பெண்கள் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு கையில் குடத்தை ஏந்திப் போராட்டம் நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க