அரசுப் பேருந்துகளைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளிலும் கட்டண உயர்வு! - வேதனையில் மக்கள் | Private transports also hiked their bus fare

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (23/01/2018)

கடைசி தொடர்பு:10:31 (23/01/2018)

அரசுப் பேருந்துகளைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளிலும் கட்டண உயர்வு! - வேதனையில் மக்கள்

 

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, நிதிச்சுமை காரணமாக தமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. கட்டண உயர்வு, சனிக்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தக் கட்டண உயர்வு, ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதிப்பதை அறிந்தும், கட்டண உயர்வைத் திரும்பப் பெற இயலாது என அரசு கடந்த திங்களன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக, அரசுப் பேருந்துகளுக்கு இணையாக மதுரையில்  தனியார் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

இதுகுறித்து பொதுமக்கள், 'கடந்த மாதம் 69 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 76 ரூபாய்க்கு வந்துவிட்டது. இதையே அநியாயம் என புலம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், கடந்த வாரம் 50 ரூபாய்க்கு எடுத்த பஸ் டிக்கெட் இன்று 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அநியாயத்தை என்னவென்று சொல்ல... அரசுப் பேருந்துக் கட்டணம்தான் உயர்த்தப்பட்டுள்ளது என்று பார்த்தால், தனியார் பேருந்துகளும் அரசுப் பேருந்துகளுக்கு இணையாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. வசதி உள்ள மக்கள், தங்களின் போக்குவரத்துக்கு வேறு வழிகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு ஒரு பொருட்டே இல்லை. ஆனால், தங்களின் போக்குவரத்துக்காக  பேருந்துகளை நம்பி இருக்கும் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தினக்கூலிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக உள்ளது. நெடுந்தொலைவில் வேலைக்குச் செல்வோர் வருமானத்தில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேலாக பேருந்துக்காகச் செலவழிக்க வேண்டியதிருக்கிறது. ஊழல்வாதிகளும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றனர். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கும் ஓய்வூதியத்துக்கும், செய்த ஊழல்களை மறைக்க மக்களை ஏன் அரசியல்வாதிகள் சுரண்டுகின்றனர். இவர்கள், ஸ்ட்ரைக்கை நிறுத்திவிட்டு கட்டணத்தை உயர்த்துவதற்கு, ஸ்ட்ரைக்கிலேயே இருந்திருக்கலாம்' எனத் தங்களின் வயிற்றெரிச்சலைத் தெரிவித்தனர்.