வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (23/01/2018)

கடைசி தொடர்பு:11:40 (23/01/2018)

பணிக்கு வந்த ஓராண்டில் சாதித்த பெண் காவலர்! பரிசு வழங்கிப் பெருமைப்படுத்திய நீதிபதி

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்த பெண்  காவலருக்கு, நீதிபதி பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

பெண் காவலர்

காவல்துறையின்மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அதிலும் நேர்மையுடனும் பொறுப்புடனும் பணியாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதை உறுதிப்படுத்தியுள்ள மற்றொரு பெண் காவலர்தான் ஸ்வப்ன சுஜா.  காவல்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர், கோவை, சிங்காநல்லூர் காவல்நிலையத்துக்குப் பணிக்கு வந்து  ஓராண்டுதான் ஆகிறது. ஆனால், கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் பணியாற்றியுள்ளார். அதன்படி, 2012-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த, பழைய வழக்குகளில் 85 வழக்குகளுக்கான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்று, அவ்வழக்குகளை முழுமையாக முடித்துவைத்திருக்கிறார். 

இந்நிலையில், கோவை மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுசாமி மற்றும்  காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட வழக்குகள் தொடர்பான கூட்டம், நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வழக்குகளை விரைந்து முடிக்க உதவிய பெண் காவலரைப் பாராட்டிய நீதிபதி, அவருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.