வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (23/01/2018)

கடைசி தொடர்பு:13:52 (23/01/2018)

மென்பொறியாளர் ரகுவைக் கொன்றது யார்? - உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

கோவையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மோதி ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரகுவைக் கொன்றது யார்

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி முடித்துள்ளது தமிழக அரசு. ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ரகுசர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கோவையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மோதி ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ரகு உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கைக் கோரி கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.

அதன்படி, உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரகுவின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜெ சிலை

டேனியல்இதுகுறித்து டேனியல் ஜேசுதாஸ் கூறுகையில், "பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதேபோல, முன்பு இருந்த அண்ணா சிலையைப் பெயர்த்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்திலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் மீறியுள்ளனர். அதனால், அப்பாவி இளைஞரின் உயிர் பறிபோயுள்ளது" என்றார்.

இந்த வழக்கு, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.