மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகளைக் கணக்கெடுக்க களத்தில் இறங்கும் 500 பேர்! | Tiger census begins in Nellai

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (23/01/2018)

கடைசி தொடர்பு:15:00 (23/01/2018)

மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகளைக் கணக்கெடுக்க களத்தில் இறங்கும் 500 பேர்!

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் வரும் 27-ந்தேதி முதல் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 500 பேர் பங்கேற்பார்கள் எனப் புலிகள் காப்பகக் கள இயக்குநரான வெங்கடேஷ் தெரிவித்தார். 

கணக்கெடுப்பு பற்றி கள இயக்குநர்

நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையில் 295 சதுர கி.மீ பரப்பளவில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு 8,374 ஏக்கர் நிலத்தில் பாம்பே பர்மா டிரேடிங் காப்பரேஷன் நிறுவனம் தேயிலை பயிரிட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கான 99 ஆண்டு கால குத்தகை, வரும் 2028-ம் வருடம் முடிவடைய இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க உத்தரவிட்டுள்ளது. அதனால் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை வனத்துறை தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், நாட்டின் 17 வது புலிகள் காப்பகமான களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், மிளா, கரடி உள்ளிட்ட விலங்குள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற்று வந்தாலும் 4 ஆண்டுக்கு ஒருமுறை தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணகெடுக்கும் பணி நடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு வரும் 27-ம் தேதி முதல் ஒருவாரம் நடைபெற உள்ளதாகப் புலிகள் காப்பக கள இயக்குநரான வெங்கடேஷ் தெரிவித்தார்.

இந்தப் பணியில் வனத்துறை ஊழியர்கள் 250 பேரும் தன்னார்வலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் 250 பேரும் பங்கேற்கின்றனர். 500 அதிநவீன கேமராக்கள் வனப்பகுதியில் பொருத்தப்பட்டு மார்ச் 31-ம் தேதி வரை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த கணக்கெடுப்பின்போது 15 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வெங்கடேஷ் தெரிவித்தார்.