`எங்கள் படிப்பை பெற்றோர்கள் நிறுத்திவிடுவார்கள்' - பஸ் கட்டண உயர்வால் கண்ணீர்விடும் மாணவிகள்

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தொகுதியான கரூரில், அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் இயங்கிவருகிறது அரசு கலைக்கல்லூரி. இந்தக் கல்லூரியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகிறார்கள். சில தினங்களுக்கு முன், பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதைக்  கண்டித்து, மாநிலம் முழுக்க பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்றுமுதல் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த வகையில், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இன்று (22-ம் தேதி) கல்லூரி வாசல் முன் கூடி, உள்ளிருப்புப் போராட்டதில் ஈடுப்பட்டுவருகிறார்கள். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கண்டித்து, மாணவ மாணவிகள் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், "இது விவசாயம் சார்ந்த மாவட்டம். அதுவும் மானாவரி நிலங்கள் நிறைந்த மாவட்டம். இங்கு விளைவிக்கப்படும் பொருள்களுக்கு விவசாயிகள் விலை நிர்ணயிக்க முடிவதில்லை. தொழில்நகரமான கரூரில் வேலைபார்க்கும் பல லட்சம் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம்கூட இன்னும் உயரவில்லை. அப்படி இருக்கையில், பேருந்துக் கட்டணத்தை விர்ரென உயர்த்தினால், எங்களின் நிலை என்ன ஆகும்? இதனால், மத்த பொருள்களின் விலையும் உயரும். எங்களை எங்க பெற்றோர்கள் கஷ்டப்பட்டுதான் படிக்கவைக்கிறார்கள். இப்படி பஸ் கட்டணம், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்தால், அவர்கள் எங்க படிப்பை நிறுத்தவும் வாய்ப்பிருக்கு. அதனால்தான், போக்குவரத்துத்துறை அமைச்சரைக் கண்டித்து, இங்கே உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறோம். உடனே, தமிழக அரசு ஏற்றிய பஸ் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும். இல்லைனா, எங்க போராட்டம் வலுக்கும்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!