கொலை, கஞ்சா வழக்கில் தொடர்புடைய ரவுடி படுகொலை! | madurai rowdy killed in mysterious way

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (23/01/2018)

கடைசி தொடர்பு:15:50 (23/01/2018)

கொலை, கஞ்சா வழக்கில் தொடர்புடைய ரவுடி படுகொலை!

மதுரை  ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராமர், மர்ம நபர்களால் இன்று (22-ம் தேதி) அதிகாலை படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை பெரியார் பேருந்துநிலையத்தை அடுத்த ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ராமர் என்பவர் வசித்துவந்தார். இவர் மீது கொலை, கஞ்சா உள்ளிட்ட ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை சில மர்ம நபர்கள், மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஊரணிக்கரையில் வைத்து ராமரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். அந்த மர்ம நபர்கள் மீது, சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத்தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக படுகொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் தொழில் போட்டியா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில், தொடர்ச்சியாகப் பல கொலை மற்றும் கொள்ளைகள் அதிக அளவில் அரங்கேறிவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். கோயில் மாநகர் மதுரையில், தொடர்ச்சியாக இப்படியான சம்பவம் நடப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எரித்துக் கொலை, கேன்டீனில் வேலைசெய்துவந்த சமையல் மாஸ்டர் கொலை போன்ற பரபரப்புகள் அடங்குவதற்குள், இன்று ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மதுரையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.