`முதல் நியமனத்திலேயே ஊழல்' - சேலம் துணைவேந்தருக்கு எதிராகக் கொந்தளிக்கும் பேராசிரியர்கள்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், முறைகேடாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினார்கள் என்ற சர்ச்சைகள் அடங்குவதற்குள், தற்போதைய துணைவேந்தர் குழந்தைவேல், நேற்று (21-ம் தேதி) மாணவர்கள் குறைதீர்க்கும் மையத்தின் ஒருங்கிணைப்பாளராக எரிசக்தித்துறையின் இணை பேராசிரியர் ரமேஷ்குமாரை நியமித்திருப்பது, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி, பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்களிடம் பேசியபோது, ''ஒரு பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக வர வேண்டும் என்றால், குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய பிறகே இணை பேராசிரியருக்கு விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால், பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகள்  உதவிப் பேராசிரியராக இருந்தால், கல்விநிலைத் தகுதி அடிப்படையில் பதவி உயர்வுபெற்று, இணை பேராசிரியர் ஆகலாம். ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தின் எரிசக்தித்துறை இணை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் (பொறுப்பு) இருக்கும் ரமேஷ்குமார் 2015ல் பி.ஹெச்.டி. முடித்ததும் தன் உறவினரான முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் மூலம் முறைகேடாக 2016ல் எரிசக்தித்துறையின் இணை பேராசிரியர் ஆனார். ரமேஷ்குமார், பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் துறையில் சேர்வதற்கே தகுதியற்றவர்.  

ஏனென்றால், பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம். ரமேஷ்குமார் படித்தது, இன்ஜினீயரிங். அதனால் இவர் அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஆகிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர முடியும். பெரியார் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு தகுதியற்றவர் ஆகிறார். ரமேஷ் குமாருக்கு, பணி நியமனமே சிக்கலாக இருக்கிறது. இவர் பணியில் சேர்ந்து, இன்னும் தகுதிக் காலப் பருவம் 2 ஆண்டுகள் முடியவில்லை. இந்நிலையில், புதிதாக வந்துள்ள துணைவேந்தர் குழந்தைவேல், பல்கலைக்கழகத்தில் அனுபவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட மூத்த பேராசிரியர்கள் இருக்கும்போது, தன் சமூகத்தைச் சேர்ந்த, முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனுக்கு உறவினரான ரமேஷ்குமாரை நேற்று புதிதாக மாணவர்கள் குறைதீர்க்கும் மைய ஒருங்கிணைப்பாளர் பதவியில் நியமனம்செய்தது, பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!