வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (23/01/2018)

கடைசி தொடர்பு:20:13 (24/01/2018)

“குழந்தைக்கு மரியம்ன்னு பேர் வச்சிருக்கேன்!” ஜல்லிக்கட்டு புரட்சியில் காவல்துறையிடம் அடிவாங்கிய கர்ப்பிணி இன்று! #JallikattuProtest #Nadukkuppam

அராப் அப்ரைசிங், வால்ஸ்ட்ரீட் போராட்டங்கள் நடைபெற்றபோது, “அந்த மாதிரியெல்லாம் இங்கே நடக்காதுப்பா” என்று காபியைக் குடித்துக்கொண்டே ஆங்கிலப் பேப்பரைப் புரட்டியவர்களுக்கு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம், ‘நாங்களும் கெத்து’ என்று புரியவைத்தார்கள் தமிழக இளைஞர்கள். எவ்வளவு எழுதினாலும் தீராது அந்தப் போராட்டத் திருவிழா. ஆனால், போராட்டத்தின் கடைசி நாளில் காவல்துறை, அவர்களது எஜமானர்களின் ஆணைக்கு இணங்க ‘தழும்புகளைக்’ கொடுத்து அனுப்பினார்கள். மாணவர்களைக் காப்பாற்ற வந்த மீனவர் வீடுகள் கொளுத்தப்பட்டன. ஆட்டோ, போலீஸ் ஸ்டேஷன் எனக் கொளுத்திவிட்டு, மாணவர்கள் மீது பழி போடப்பட்ட கதைகள் நமக்குத் தெரிந்ததே. அந்தத் தை எழுச்சியின் முதலாமாண்டு (ஜனவரி 23) என்பதால், மெரினா அருகில் உள்ள மீனவ கிராமங்களில் காவல்துறையால் தாக்கப்பட்ட சிலரிடமும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடமும் ஒரு வருடத்தில் வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது என்று கேட்டோம். 

“பொய் வழக்கு போட்ருவோம்னு மிரட்டினாங்க!” 

ஜல்லிக்கட்டு - பிரேம் குமார் குடும்பம்

காவல்துறையினரால் தாக்கப்பட்ட பிரேம்குமார் கூறுகையில், “ஆறு மாதங்கள் எந்தத் தொழிலும் செய்யமுடியாமல், கடந்த சில மாதங்களாக வேலைக்கு சென்றுகொண்டிருகிறேன். சென்னை, நடுக்குப்பத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். கடந்த ஆண்டு இதே பகுதியில், கலங்கரை விளக்கம் புறநகர் ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள மாயாண்டித் தெருவில் இருந்தது என் வீடு. விவேகானந்தர் இல்லத்துக்கு அருகில் தள்ளுவண்டி கடை நடத்திவந்தேன். என் மனைவி ஃபெமினா. நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இரண்டு குழந்தைகள். மூத்தவன் ஹித்தேஷ், மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இளையவள் சுமிதாவுக்கு மூன்று வயது. கடந்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி காலை, கலவரம் பற்றி அறிந்ததும் என் கடையை அடித்து நொறுக்கிவிடுவார்களோ என்கிற அச்சத்தில் சென்று பார்த்தேன். அப்போது, காவலர்கள் துரத்தவே போராட்ட மாணவர்களோடு ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் தஞ்சம் புகுந்தேன். கதவை உடைத்துக்கொண்டு நுழைந்திருக்கிறது காவல்துறை. 

‘போலீஸ்னா அவ்ளோ இளக்காரமா?' என்றபடி வெறியோடு தாக்கியதில், என் முகத்து எலும்புகள் நொறுங்கி, மயங்கி விழுந்தேன். என் உடலை மிதித்து, இரண்டாவது மாடியிலிருந்து படிகளில் இழுத்து வந்து கீழே போட்டனர். அதன்பிறகு, என் குடும்பத்தினர் என்னைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்தனர்.” என்றார். 

“மூணு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டோம். இருந்த வீட்டுக்கு வாடகை தரமுடியாம இப்போ வரை என் அப்பா வீட்டுலதான் இருக்கோம். இவரு ஆறு மாசத்துக்கு நகரமுடியலை. கடன் நிறையா ஆகிடுச்சு. எங்க பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டவும் பணம் இல்லாமல், கவர்மென்ட் ஸ்கூலுக்கு மாத்திட்டோம்'' என்கிறார் அவர் மனைவி ஃபெமினா.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு சம்பந்தமில்லாத ஓர் எளிய குடும்பம், தங்கள் வாழ்க்கையே மாறிப்போனதை நினைத்து மனம் நொந்துக்கொண்டிருக்கிறது. 

அவள் பெயர் மரியம்! 

ஜல்லிக்கட்டு - தில்ஷாத்

கடந்த ஆண்டு, நடுக்குப்பத்தில் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் அடித்து விரட்டியது காவல்துறை. இந்தத் தாக்குதல் நடுக்குப்பம் தொடங்கி, சுற்றுப் பகுதிகளான மாட்டாங்குப்பம், ரூதர்புரம், மாயாண்டி காலனி, நீலம்பாஷா தர்கா தெரு என விரிவடைந்தது. அப்போது, நீலம்பாஷா தர்கா தெருவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான தில்ஷாத் காவல்துறையால் தாக்கப்பட்டார்.

தன் வீட்டுக்கு வெளியே இருந்த ஆட்டோக்கள் உடைக்கப்படுவதைக் கண்ட தில்ஷாத், “எதுக்கு சார் ஆட்டோவை உடைக்கிறீங்க?” என்று கேட்டிருக்கிறார். காவல்துறையினர் அவரைத் தாக்க முயல, வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடியிருக்கிறார். எனினும், கதவை உடைத்து நுழைந்து அவரைத் தாக்கிவிட்டு சென்றுள்ளார்கள். 

“என்னை அடிச்சுட்டு போனதும் வெளியே வந்து பார்த்தேன். என் அண்ணனைப் போட்டு அடிச்சிட்டிருந்தாங்க. அதைத் தடுத்த என்னையும் தள்ளி முதுகுல அடிச்சாங்க'' என்று அப்போது நெற்றியில் அடிபட்ட காயத்தின் தழும்பைக் காட்டுகிறார். இதைப் பற்றி உண்மை அறியும் குழுவிடம் சொல்லியிருக்கிறார் தில்ஷாத். பெரிய காயங்கள் எதுவுமில்லை என்று கூறி அவருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. 

பிறகு, ஏப்ரல் மாதம் 17-ம் தேதி, இராயப்பேட்டை மருத்துவமனையில் அவருக்குப் பெண் குழந்தைப் பிறந்துள்ளது. '’சிசேரியன்தான். கொழந்த நல்லா இருக்கா. அவ பேரு மரியம்” என்கிறார். 

தாய் மடியில் இருந்த மரியம், மலர்போல சிரித்தது. 

“போராட்டம் எங்களுக்குள் குடும்பத்தைக் கொடுத்திருக்கு!” 

ஜல்லிக்கட்டு - வினோலி ரோஹித்

“ரெண்டு பேரும் பிரதர் சிஸ்டரா?” என்று கேட்கவைத்தார்கள் வினோலியும் ரோஹித்தும். இருவருமே ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சந்தித்துக்கொண்டவர்கள். தற்போது, ஒரு ரெஸ்ட்டாரண்டில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். 

“ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பி.பி.ஓ வேலை பார்த்துட்டிருந்தேன். போராட்டத்துக்காக ‘சிக் லீவ்’ போட்டேன். அது தெரிஞ்சு லீவ் தரமுடியாதுனு சொல்லிட்டாங்க. அடுத்த நாளிலிருந்து சொல்லாமலே போராட்டத்துக்குக் கிளம்பிட்டேன்” என்கிற ரோஹித் கண்களில் அத்தனை பெருமிதம். “அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டால், “வேற என்ன? அந்த வேலையை விட்டுட்டேன்” என்கிறார் கூலாக. 

அப்போது, வினோலி ஒரு ரெஸ்ட்டாரண்டில் வேலை பார்த்திருய்க்கிறார். அவரும் வேலையை விட்டுவிட்டுப் போராட்டத்தில் இருந்திருக்கிறார். “ஜூலி எங்களுக்குப் பக்கத்துல நின்னுதான் கோஷம் போட்டுட்டிருந்தாங்க. அவங்களை மாதிரி நாங்க ஃபோட்டோ எடுத்து போடலை. சேனலில் கவர் பண்ணினப்பவும், ‘வேணாம் ப்ரோ'னு கேட்டுகிட்டோம். ஏன்னா, எங்க போராட்டத்தை விளம்பரப்படுத்திக்க விரும்பலை” என்கிறார். 

“அந்த நாள் என்ன ஆச்சுன்னு ஞாபகம் இருக்கா?'' எனக் கேட்டதும், “அன்னைக்கு விடிய காலையில் வீட்டுல இருந்தேன். நாலு மணிக்கு போலீஸ் நிறைய இருக்காங்கன்னு ஃபோன் வந்துச்சு. அதுவரை வீட்டுல எனக்கு சப்போர்ட்டா இருந்தவங்க, அன்னைக்கு என்னைப் போகக்கூடாதுனு ரூமில் தள்ளி கதவைப் பூட்டிட்டாங்க. என்ன செய்றதுன்னே தெரியலை. எங்க கேங்கில் மொத்தம் 15 பேர். அதுல ஒரு பொண்ணு அங்கே மாட்டிகிட்டது தெரிஞ்சதும், வெளியில் இருந்தவங்களுக்கு போன் போட்டு நிலவரத்தை விசாரிச்சுட்டிருந்தேன்” என்கிறார் ரோஹித். 

இடைமறித்து பேசத் தொடங்கினார் வினோலி, “நாங்க அந்தப் பொண்ண தேடி அலைஞ்சோம். எல்லா இடத்தையும் பிளாக் பண்ணிட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு காலில் அடி. ஒருவழியா அவளை மீட்டு கொண்டுவர்றதுக்குள்ளே பெரிய பாடாயிடுச்சு'' என்கிறார் வினோலி. 

போராட்டத்துக்குப் பிறகு வினோலி இன்னொரு ரெஸ்ட்டாரண்டில் மேனேஜராக சேர, ரோஹித்தும் அங்கேயே அசிஸ்ட்டண்ட் மேனேஜராக இணைந்திருக்கிறார். “ஜல்லிக்காட்டு எங்களுக்கு பெரிய குடும்பத்தைக் கொடுத்திருக்கு. எங்க ஜல்லிக்கட்டு கேங்கில் ரெண்டு பேர் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க. நாங்க 15 பேரும் இன்னும் பிரியாமல் இருக்கோம். ஒருத்தரிடம் கொஞ்ச நாள் பேசிக்காமல் இருந்தாலும், அவங்க வீட்டிலிருந்தே போன் வந்துடும். “என்னப்பா அம்மாவை மறந்துட்டியா’'னு கேட்பாங்க என்று புன்னகைக்கிறார்கள். 

“அது ஒரு சினிமா மாதிரி இருந்தது!” 

ஜல்லிக்கட்டு - கீதா

சென்னையிலிருந்து கோயிலில் சாமி கும்பிட அலங்காநல்லூர் சென்றவர் கீதா. அங்கே போராட்டத்தில் இவரும் பங்கேற்க கைது செய்யப்பட்ட 250 பேர்களில் ஒருவரானார். 250 பேரில் மூன்றே பெண்கள்தான். தற்போது, தமிழகத்தில் நடக்கும் மற்ற போராட்டங்களிலும் முடிந்த அளவுக்குக் கலந்துகொள்கிறார் கீதா. 

“அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 250 பேரை விடுதலை செய்யச் சொல்லித்தான் சென்னையில் போராட்டம் ஆரம்பிச்சது. எங்களைக் கைது செய்த போலீஸ், 'உங்களுக்கு குழந்தைகள் இருக்கு. தேவையில்லாமல் பிரச்னை பண்ணாதீங்க' என்கிற ரீதியில் மிரட்டினாங்க. அலங்காநல்லூர் மக்கள் வெளியில் இருந்த எங்க பிள்ளைகளுக்குத் தேவையான பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பிவெச்சாங்க. எங்களையும் விடுதலை செய்யணும்னு போராட்டம் செய்ய, போலிஸுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. இரண்டாவது நாள் இரவு பன்னிரண்டு மணிபோல எங்களை விடுட்டாங்க. அப்போ எங்கள் எண்ணிக்கை அறுபதாக குறைஞ்சுப்போச்சு. எங்களை கூட்டிட்டுப்போக மூணு வேன்களை மக்கள் ஏற்பாடு செய்திருந்தாங்க” என்றவர், ஒரு பெருமூச்சுவிட்டுத் தொடர்ந்தார். 

“நாங்க 60 பேரும் சீட்டுக்கு அடியில் ஒளிஞ்சுக்கிட்டோம். செல்போன்களை ஆஃப் பண்ணிட்டோம். வண்டி லைட்டையும் ஆஃப் பண்ணிட்டாங்க. காடு, வயல் எனப் புகுந்து போலீஸ்கிட்ட மாட்டாமல் மீண்டும் போராட்டம் நடந்த இடத்துக்குப் போய் சேர்ந்தோம். அப்படியே அஞ்சு நாள் ஓடிருச்சு” என்ற கீதாவிடம், “அந்தக் கடைசி நாள் அலங்காநல்லூரில் என்ன நடந்துச்சு?'’ எனக் கேட்டோம். 

“திடீர்னு போலீஸ் அடிக்க ஆரம்பிச்சாங்க. நாங்க ஓடிட்டிருந்தோம். திடீர்ன்னு அய்யோன்னு ஒரு சத்தம். என்னன்னு திரும்பி பார்த்தால் ரெண்டு பசங்களுக்கு பேண்ட், வேட்டி முழுக்க ரத்தம். அவங்களை அடிக்கக்கூடாத இடத்துல அடிச்சிருக்காங்க. அந்தப் பசங்க ‘அக்கா’னு கூப்பிட்டாங்க. அவங்களைத் தூக்கிவிடப் போனப்போ எனக்கு இடுப்பில் சரியான அடி. நினைவு திரும்பி எந்திரிக்குறதுகுள்ளே தலையில் அடிச்சாங்க. அதையெல்லாம்விட வலி என்னன்னா... ஜல்லிக்கட்டுக்காகப் போராடினவங்களுக்கு அலங்காநல்லூரில் முன்னுரிமைனு சொன்னாங்க. ஆனால், அரசியல்வாதிகள், காவல்துறையின் குடும்பங்களே மேடை முழுக்க இருந்தாங்க. இந்த வருஷம் வீட்டுல பொங்கல் வெச்சுட்டு நேரா அலங்காநல்லூர்தான் போனோம். அங்கே இருந்தவங்க அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தாங்க. 'எங்க வீட்டுக்கு வரணும், எங்க வீட்டுக்கு வரணும்'னு அன்பால் குளிப்பாட்டிட்டாங்க. அன்னிக்கு கோயிலுக்காக வந்த என்னை, இன்னைக்கு ஒரு போராட்டக்காரியா ஜல்லிக்கட்டு போராட்டம் மாத்தியிருக்கு. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் தமிழக வாழ்வாதாரம் சார்ந்த போராட்டத்துக்கு வரணும்” என்றார் கம்பீரமாக.

 


டிரெண்டிங் @ விகடன்