பல மடங்கு வரி உயர்த்திய நகராட்சி! - களத்தில் இறங்கிப் போராடிய அனைத்துக் கட்சியினர்

பரமக்குடி நகராட்சி விதித்துள்ள சொத்து வரி உயர்வைக் கைவிடக் கோரி அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

தமிழகத்தில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உள்ளாட்சி மன்றங்களின் நிர்வாகப் பதவி முடிந்து ஓராண்டாகியும் தேர்தல் நடத்தப்படாத நிலையில், அதிகாரிகளே நிர்வகித்து வருகின்றனர். இதனால், பஞ்சாயத்து ராஜ் மசோதாவின்படி உள்ளாட்சி மன்றங்களுக்கான மத்திய அரசு நிதிகளைப் பயன்படுத்த முடியாமல் நிர்வாகச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடி நகராட்சி, ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான நிதிகளையும் செலவுசெய்துவிட்டதால், நகராட்சி நிர்வாகத்தில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுபோன்ற போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அதை ஈடுகட்ட  பொதுமக்கள் செலுத்தும் வரியைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

மேலும், பரமக்குடி நகராட்சியின் வருவாயை அதிகரிக்க,  சொத்துவரி உள்ளிட்ட அனைத்து  வரிகளையும் பல மடங்கு உயர்த்தியதுடன், உயர்த்தப்பட்ட வரியை  6 ஆண்டுகள் முன் தேதியிட்டுக் கட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில்,  பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கக்கூடிய பரமக்குடி நகராட்சியின் இந்தக் கூடுதல் வரி உயர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி, பரமக்குடியில் அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!