வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (23/01/2018)

கடைசி தொடர்பு:18:35 (23/01/2018)

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்..! தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்தனர். அதில், ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். அதையடுத்து, மற்ற 18 பேரையும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், அனைத்து தரப்பினரும் அவர்களுடைய எழுத்துபூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்தனர். டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் சார்பில், நாங்கள் வேறு எந்த அணிக்கும் தாவவில்லை. முதல்வரை மட்டுமே மாற்றக் கோரினோம். எங்கள்மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். கட்சிக்குள் உள்ள பிரச்னையைச் செயற்குழு பொதுக்குழுவில் பேசித் தீர்க்காமல் ஆளுநரிடம் கொண்டு செல்லப்பட்டது தவறு. எனவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் விளக்கமளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.