காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைப் பேசவிடாமல் கூச்சல்! - பா.ஜ.க-வினரைக் கடுமையாக எச்சரித்த பொன்.ராதாகிருஷ்ணன் | Pon Radhakrishnan warns BJP cadres

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (23/01/2018)

கடைசி தொடர்பு:18:50 (23/01/2018)

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைப் பேசவிடாமல் கூச்சல்! - பா.ஜ.க-வினரைக் கடுமையாக எச்சரித்த பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவிலில் மத்திய ரயில்வே அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் பேசுகையில் பா.ஜ-வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் இதைக் கண்டித்தார்.

ரயில்வே நிகழ்ச்சி

மதுரை முதல் நாகர்கோவில் வரையிலான ரயில் பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இது தொடர்பாகப் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டபோதிலும், நிதி ஒதுக்கப்படாததால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதனால், மதுரையிலிருந்து குமரி வரை செல்லும் பயணிகள் காலதாமதத்தைச் சந்திக்க வேண்டியதிருந்தது. 

அதனால், இந்தப் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என ரயில்வே பயணிகள் நலச் சங்கத்தினர், வர்த்தகப் பிரமுகர்கள், பொதுமக்கள் சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து மதுரை-வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி வழிப்பதையையும் நெல்லை-நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி-நாகர்கோவில்-திருவனந்தபுரம் பாதையை மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில்பாதையாக மாற்றுவதற்கான திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டங்களை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கொகைன் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் இன்று (22.1.2018) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.4,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜயகுமார் எம்.பி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான பிரின்ஸ், வசந்தகுமார், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இரட்டை ரயில்பாதை

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான பிரின்ஸ், மாவட்ட மக்களின் ரயில்வே கோரிக்கைகள் குறித்து பேசத் தொடங்கினார். ஆனால், பா.ஜ-வினர் அவரைப் பேச விடாதபடி ’பாரத் மாதாக்கீ ஜே’ எனக் கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். அதனால் அதிருப்தி அடைந்த அவர், ’மக்களின் தேவைக்காக ரயில்வே அமைச்சரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்துப் பேச இருந்தேன். நீங்கள் இப்படிச் செய்வதால் நான் அதிக நேரம் பேச விரும்பவில்லை. எனது கோரிக்கைகளை மனுவாக அவரிடம் கொடுத்துவிடுகிறேன்’ என்று சுருக்கமாகப் பேச்சை முடித்துக்கொண்டார்.

வசந்தகுமார் எம்.எல்.ஏ பேசும்போதும் அ.தி.மு.க-வினரும் பா.ஜ-வினரும் கோஷங்களை எழுப்பி இடையூறு செய்தார்கள். இதனால் எரிச்சலான செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க-வினரை அமைதியாக இருக்குமாறு கண்டித்தார். பின்னர், பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், `எங்களுக்குள் அரசியல்ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டதன் காரணமாகவே வளர்ச்சித் திட்டங்கள் இந்தப் பகுதிக்கு வருகிறது. அதனால், யாரும் இந்தப் பகுதியின் வளர்ச்சியைத் தடுக்க நினைத்தாலும் அது நடக்காது. இதில் பிரிவினை ஏற்படுத்த நினைத்தால் இந்த மாவட்டம் சுடுகாடாக மாறும்’ என எச்சரித்தார். 


[X] Close

[X] Close