வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (23/01/2018)

கடைசி தொடர்பு:19:05 (23/01/2018)

மல்லிகைப்பூ கிலோ 6,000 ரூபாய்! வரலாறு காணாத விலை உயர்வு

நாட்டில்  பெய்துவரும் கடுமையான பனிப்பொழிவை அடுத்து பல்லாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மலர் வகைப் பயிர்கள் கருகிவிட்டன. இதன் காரணமாகப் பூக்களின் விலை வரலாறு காணாத ஏற்றத்தில் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, பெண்கள் மிகவும் விரும்பி சூடிக்கொள்ளும் மல்லிகைப்பூ கிலோ 6,000 ரூபாய்க்குமேல் விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் பூ வியாபாரி சண்முகம் இது குறித்து கூறுகையில், ''எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மல்லிகைப்பூ இந்த விலைக்கு விற்கப்படவே இல்லை. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணிவரை நீட்டிக்கிறது.

இதனால், மென்மையான பயிரான பூச்செடிகள் பனியில் கருகிவிடுகிறது. விளைச்சலும் பாதிப்படைந்து வருகிறது. மழை, வெயில், பனி இந்த மூன்றையும் சம நிலையில் வைத்திருக்கும் விவசாயத் தொழில்நுட்பங்களில் ஒன்று பசுமைக்குடில் விவசாயம். பசுமைக்குடில் அமைத்து மலர் சாகுபடி மேற்கொண்டால் பனிப்பொழிவு பாதிப்பில் இருந்து பூச்செடிகளைக் காப்பாற்றமுடியும். விலையேற்றதையும் கட்டுப்படுத்த முடியும்'' என்றவர்,

கனகாம்பரம் தவிர மற்ற அனைத்து வகைப் பூக்களும் கிலோ 1,400 ரூபாய்க்கு மேல் போகிறது. வரும் வாரங்களில் முகூர்த்த நாள்கள் அதிகம் இருப்பதால் பூக்களின் விலை குறைய வாய்ப்பிலை. பொன்னை வைக்கும் இடத்தினிலே பூவை வைத்து பார் என்பார்கள், இனி பூவை வைக்கும் இடத்தினிலே பொன்னை வைக்கும் நிலை வரும்போலும்'' என்றார் சண்முகம்.