`கூட்டத்தில் இருக்கும் ஸ்லீப்பர் செல்லுக்கு நன்றி சொல்லுங்க!' - திகைத்துப்போன அமைச்சர் துரைகண்ணு

அ.தி.மு.க-வில் எங்க ஸ்லீப்பர் செல் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அவர்கள் நேரம் வரும்போது வெளியே வருவார்கள் எனத் தினகரன் பேசி வருகிறார். இந்த நிலையில் கும்பகோணத்தில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், "இங்கே இருக்கிற ஸ்லீப்பர் செல்லுக்கும் சேர்த்து நன்றி சொல்லுங்கள்" என மேடையில் பின்புறம் இருந்த நிர்வாகிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

sleeper cell

எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அ.தி.மு.க வடக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் துரைகண்ணு தலைமையில் கும்பகோணத்தில் நடந்தது. பெரிய அளவில் கூட்டம் வரும் என எதிர்பார்த்தார் துரைகண்ணு. ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏராளமான இருக்கைகள் காலியாகக் கிடந்ததால் நிர்வாகிகள் மீது கடுகடுத்தார். அதன் பிறகு, பேச ஆரம்பித்த துரைகண்ணு, "அ.தி.மு.க-வை எதிர்த்த துரோகிகள் எல்லோரையும் ஒழித்துக்கட்ட வேண்டும். எதிர்த்தவர்கள் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதோடு இருந்த இடம் தெரியாமலும் போய்விட்டனர். கட்சியைக் கெடுக்க நினைக்கும் கும்பலுக்கு இடம் அளிக்காமல் அவர்களை விரட்டியடிக்க வேண்டும்" என்று பேசியபோது, தொண்டர்கள் தினகரனை விமர்சித்து பேசுங்கள் எனக் கோஷமிட்டனர். ஆனால், அதைக் கவனிக்காதவாறே அமர்ந்தார் துரைகண்ணு.

பின்னர், நகரச் செயலாளர் குடுமி ராமநாதன், "தினகரன் ஆதரவாளர்கள் வார்டு தேர்தலில் நின்றால்கூட வெற்றி பெற முடியாது. ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் வைத்து அவர் செயல்பட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்" எனப் பேசி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார். அப்போது, மேடையில் இருந்த நிர்வாகிகள் சிலரும் முன்னே கூடியிருந்த தொண்டர்களும் அப்படியே நம்மிடம் இருக்கும் ஸ்லீப்பர் செல்லுக்கும் சேர்த்து நன்றி சொல்லுங்கள் எனக் கூறினர். துரைகண்ணு உட்பட அனைவரும் செய்வதறியாமல் திகைத்து கூட்டத்தை முடித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!