'பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் வாங்க முடியாது'- வைகைச் செல்வன் திடீர் காட்டம்

'இப்போது தேர்தல் வந்தால், பொன். ராதாகிருஷ்ணன் தனது சொந்தத் தொகுதியில் டெபாசிட்கூட வாங்க மாட்டார்"என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் அதிரடியாகக் கூறினார்.

மூச்சுத் திணறல் காரணமாக புதுக்கோட்டை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல இயக்குநர் மகேந்திரனை நேரில் பார்த்து நலம் விசாரிப்பதற்காக இன்று (22-ம்தேதி) புதுக்கோட்டை வந்திருந்தார் வைகைச் செல்வன்.
ஒருமணி நேரத்துக்குக் குறையாமல் மகேந்திரனுடன் பேசிவிட்டு வெளியே வந்தவர், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். முதலில் மகேந்திரன் உடல்நலம் பற்றி விவரித்தார். "அவர் நலமுடன் இருக்கிறார். உடலில் சோர்வு இருக்கிறது. இன்னும் இரண்டு நாள்களில் அவர் இல்லம் திரும்புவார். அவர்மீது கொண்ட அன்பினாலும் நெருங்கிய நண்பர் என்பதாலும் அவரைக்காண நேரில் வந்தேன். அவர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்துக்கு கவிதை எழுதும் வாய்ப்பை எனக்குத் தந்தார்"என்றவரிடம் பேருந்துக் கட்டண உயர்வு பற்றி கேள்விக் கேட்கப்பட்டது.

"போக்குவரத்துத் துறையை நவீனப்படுத்தவும் சகல வசதிகள் கொண்ட ஏராளமான புதியப் பேருந்துகளை வாங்கவுமே இந்தக் கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது. பொதுமக்களும் வருத்தத்தைத் தாங்கிக் கொண்டு இந்த விலை ஏற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்"என்றார். 'மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்கூட இந்த விலை ஏற்றத்தைக் கடுமையாக விமர்சித்து இருக்கிறாரே?'என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது," பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நோட்டாவைக் காட்டிலும் கீழ்நிலையில் அவர்கள் கட்சி இருக்கிறது. இப்போது தேர்தல் நடைபெற்றால், பொன். ராதாகிருஷ்ணன் தன்னுடைய சொந்த மாவட்டத்தில்,சொந்தத் தொகுதியில்கூட டெபாசிட் வாங்க மாட்டார்"என்றார் வைகைச் செல்வன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!