பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது தடியடி! | Police Lathi-Charge on Students in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (23/01/2018)

கடைசி தொடர்பு:20:14 (23/01/2018)

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது தடியடி!

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வு கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.3-லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர வால்வோ பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.25 ஆகவும் அதிகபட்சக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு பேருந்துக் கட்டண உயர்த்தியது. 

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், பேருந்துக் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெறக் கோரி மதுரை திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க காவல்துறையினர், லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.