''அசம்பாவிதம் நடக்குறதுக்குள்ள சரி பண்ணுங்க''- எச்சரித்த காவலாளியின் உயிர் அலட்சியத்தால் பறிபோனது!

 "மின்இணைப்புகள் சரியில்லை. அடிக்கடி ஷாக் அடிக்குது. மின்சார வயர்களை சரிபண்ணுங்க' என்று காவலாளி முருகேசன் பலமுறை அரசு அதிகாரிகள்கிட்ட புகார் பண்ணினார். அதை அவங்க கண்டுக்கல. அதனால், அந்த அப்பாவி காவலாளி முருகேசன் உயிர் அதே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்துவிட்டார்" என்று வேதனையுடன் கூறினர் சக ஊழியர்கள்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கிறது மாவட்ட அரசு மருந்துகள் சேமிப்புக் கிடங்கு. இந்த மருந்துக் கிடங்கில் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் காவலாளியாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். இன்று (22ம்தேதி) காலை குளித்த அவர், துவைத்த துணிகளைக் காயப்போட்டிருக்கிறார். அப்போது, அந்தக் கம்பியில் ஏதோ ஒரு மின்சார வயர் உரசி, அதன்வழியாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி, முருகேசன் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார். விரைந்து வந்த வெள்ளியணை காவல்நிலைய போலீஸாரும், மருத்துவத்துறை அதிகாரிகளும், "முருகேசன் ஈர உடம்போடு, ஈரத்தண்டை இடுப்பில் கட்டி, ஈரத்துணிகளை காய வைத்தார். அதன் விளைவாகவே, மின்சாரம் தாக்கி இறந்தார்' என்றனர்.

ஆனால், சக ஊழியர்களோ,  "மருத்துவக் கிடங்கு அமைந்திருக்கும் கட்டடம் முன்னொரு காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கட்டடம். அதில் மின்வசதி ஆதிகாலத்தில்தான் அமைத்திருக்கிறார்கள். அந்த வயர்கள் ஆங்காங்கே வெளியே தெரிவதோடு, அதனுள்ளே மின்சாரம் போகும் கம்பியும் வெளியில் பல இடங்களில் தெரியுது. அதனால், அடிக்கடி ஷாக் அடிக்கும். கட்டடத்தில் கையில் கிளவுஸ் அணிஞ்சுகிட்டுதான் வளைய வரணும். அந்த அளவுக்கு எல்லாமே மோசமா இருந்துச்சு. அதனால்,முருகேசன் அடிக்கடி உயரதிகாரிகளிடம், 'மின்சார வயர்களெல்லாம் வீக்கா இருக்கு. எங்கே தொட்டாலும் ஷாக் அடிக்குது. அதனால், அசம்பாவிதம் ஏதும் நடக்குறதுக்குள்ள சரி பண்ணுங்க'ன்னு பல தடவை புகார் பண்ணினார். அதை அவர்கள் கண்டுக்கல. அப்பாவி முருகேசன் உயிர் போயிட்டு" என்று வேதனை தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!