செய்தியாளர்களின் கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்த ஐ.ஜி!

கரூரில் வாலிபர் ஒருவரால் லைசென்ஸ் கேட்டதற்காக கழுத்து அறுக்கப்பட்ட போக்குவரத்து போலீஸ் ஏட்டான இளங்கோவைப் பார்க்க திருச்சி மண்டல ஐ.ஜி வருகை தந்தார். அப்போது,பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்க பயந்து, நழுவி காரில் ஏறிச் சென்றுவிட்டார். 
கரூரில் நேற்று இரவு வாகனச் சோதனையில் இளங்கோ ஈடுப்பட்டிருந்தபோது, முரளி என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தார். அவரை மடக்கிய இளங்கோ,'லைசென்ஸ் இருக்கா, ஆர்.சி புக் இருக்கா?' என்று கேட்டிருக்கிறார். 'அதெல்லாம் இல்லை' என்றிருக்கிறார் முரளி. உடனே, அவரது வண்டியை சீஸ் செய்த இளங்கோ,'கோர்ட்டில் பைன் கட்டிட்டு வண்டியை எடுத்துக்க' என்றிருக்கிறார். நேராக ஒயின்ஷாப் சென்ற முரளி, புல்லாக சரக்கு ஏற்றிக் கொண்டு வந்து, வாகனச் சோதனையில் இருந்த இளங்கோவிடம்,'என்கிட்டயே லைசென்ஸ் இருக்கா?'ன்னு கேட்பியா' என்றபடி, கையோடு எடுத்துப் போயிருந்த கத்தியால் இளங்கோவின் கழுத்தை அறுத்திருக்கிறார். அலறிய இளங்கோவை அருகில் இருந்தவர்கள் முரளியிடமிருந்து காப்பாற்றி, கரூர் அமராவதி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். முரளியை போலீஸார் கைது செய்தனர். 


 

இந்நிலையில், அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏட்டு இளங்கோவை பார்த்து நலம் விசாரிக்க வந்தார் திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜு. காரை விட்டு இறங்கிய அவர் மீடியாவை தவிர்த்துவிட்டு, உள்ளே சென்று இளங்கோவைப் பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது,செய்தியாளர்கள், "போலீஸூக்கே பாதுகாப்பில்லை. சட்டம்- ஒழுங்கு மோசமா சீர்குலைந்து கிடக்குன்னு சொல்றாங்களே' என்று கேட்டனர். ஆனால், அவர், "இளங்கோ நலமாக இருக்கிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. விரைவில் குணமாகி பணிக்குத் திரும்புவார்" என்றார். விடாத செய்தியாளர்கள், "மாசத்துக்கு இத்தனை வாகன கேஸ்களை பிடிக்கணும்ன்னு போலீஸ்காரங்களுக்கு உயரதிகாரிகள் ஆர்டர் போடுறதுனாலதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதாக சொல்றாங்களே?' என்று கேட்க, பதிலேதும் சொல்லாமல் காரில் ஏறிப் பறந்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!