`தினமும் 100 கேஸ் டார்கெட்' - உயரதிகாரிகளுக்கு எதிராகக் குமுறும் டிராஃபிக் போலீஸார்!

கரூர் மாவட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மாதத்துக்கு இவ்வளவு வண்டிகளைப் பிடிக்கணும் என்று டார்கெட் வைப்பதாகவும் அதனால், தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் கரூர் மாவட்டப் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் அலறத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, வாலிபர் ஒருவரால் லைசென்ஸ் கேட்டதற்காகக் கத்தியால் ஏட்டு இளங்கோவுக்கு கழுத்தறுக்கப்பட்டதும் இதன் பின்னணியில்தான் என்று கண்ணீர் விடுகின்றனர் போக்குவரத்துப் பிரிவு போலீஸார்.

`விஷயம் என்ன' என்று விசாரித்தோம். நம்மிடம் பேசிய, போக்குவரத்துப் பிரிவு போலீஸார் சிலர், "கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அதிகம். அதனால், இந்த மாவட்டத்தில் அதிகம் விபத்து நடக்குது. ஆனால், 'கரூர் மாவட்டப் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் சரியா வேலை செய்வதில்லை'ன்னு உயரதிகாரிகள் அடிக்கடி காவல்துறை உயர்மட்ட மீட்டிங்குகளில் புகார் படிக்கிறாங்க. இதனால், எங்களுக்கு நெருக்கடி. வேலைப்பளு, அடிக்கடி டிரான்ஸ்ஃபர்னு ஏகப்பட்ட தொல்லைகள். அதோடு, கரூர் மாவட்டப் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் ஒவ்வொரு  சப்-இன்ஸ்பெக்டரும் தினமும் 100 எண்ணிக்கையில் மோட்டார் வாகன வழக்குகள் பதியுமாறு மேல்மட்ட அதிகாரிகளிடமிருந்து அறிவுரை வருகிறது.

அவர்கள், எங்களை டார்ச்சர் செய்து, தினமும் 100 வாகன கேஸ்களைப் பிடிக்கச் சொல்றாங்க. பலரும் எல்லா ஆவணங்களையும் கொண்டு வந்தாலும் கேஸூக்காக அது இல்லை, இது இல்லை. வேகமா ஓட்டிட்டு வந்த, டிரிங்க்ஸ் சாப்பிட்டிருக்க'னு ஏதாவது ஒண்ணச் சொல்லி கேஸ் போட வேண்டியிருக்கு. இதனால், கோபமாகும் வாகன ஓட்டிகள் பலதடவை எங்களைத் தாக்கி இருக்காங்க. நேற்று உச்சகட்டமா ஏட்டு இளங்கோவை முரளி என்கிற வாலிபர் கழுத்தில் அறுத்துட்டார். இளங்கோ பணியில்; நேர்மையானவர். முரளி உண்மையில் லைசென்ஸ் இல்லாமல்தான் வந்திருக்கிறார். இதுக்கே கழுத்தை அறுத்திருக்காங்க. ஆனால், நாங்க கேஸ் பிடிக்கிறதுக்காகப் பொய்யான புகாரைப் பதிந்தால், வாகன ஓட்டிகளால் எங்க உயிருக்கே ஆபத்து வர வாய்ப்பிருக்கு. அதனால், உயரதிகாரிகள் எங்களுக்குத் தினமும் கேஸ் பிடிங்கன்னு டார்கெட் கொடுப்பதை நிறுத்தணும்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!