``அரசாணை இல்லாமல் வரியை உயர்த்துவதா?’’ சர்ச்சையில் சிக்கும் சிவகங்கை நகராட்சி

 

சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி, வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இன்னும் பல வகையான அமைப்புகள் இந்த நகராட்சியை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க நகரச் செயலாளர் துரை.ஆனந்த், "சிவகங்கை நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் வரிகளைப் பல மடங்கு உயர்த்த முடிவு செய்து நகராட்சி அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அரசு ஆணை எதுவும் இல்லாமல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளரின் வாய்மொழி உத்தரவுபடி வரி உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள வரிகள் சதுரஅடி அடிப்படையில் நான்கு அல்லது ஐந்து மடங்கு உயர்த்தப்படும். 

அத்துடன் உயர்த்தப்படும் வரியை கடந்த ஆறரை ஆண்டுகளுக்கு கணக்கிட்டு பாக்கித்தொகையாக அதையும் சேர்த்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை,  அவரவர் வரிவிதிப்புப் பெயரில் கணினியில் பாக்கித் தொகையாகக் கணக்கில் ஏற்றி வருகின்றனர். இத்தகைய மோசமான வரி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் வர்த்தகர்களையும் மிகவும் கடுமையாகப் பாதிக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற நிர்வாகம் இல்லாத நிலையில் தனி அலுவலர்கள் பொறுப்பில் நகர்மன்ற நிர்வாகம் தற்போது இருந்து வருகிறது. அப்படி இருக்கும் சூழலில் தமிழக அரசு, அரசாணை (GO) பிறப்பிக்காமல் முதன்மைச் செயலாளரின் வாய்மொழி உத்தரவின் பேரில், மறைமுகமாக அநியாய வரி உயர்வு செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, முறையற்ற இந்த வரி உயர்வைக் கைவிட வேண்டும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!