வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (23/01/2018)

கடைசி தொடர்பு:20:27 (23/01/2018)

ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஓராண்டு நிறைவு... என்ன சொல்கிறார்கள் களத்தில் போராடியவர்கள்!

ஜல்லிக்கட்டு போராட்டம்

ந்த நாளை வரலாற்றிலிருந்து தமிழர்கள் மறந்துவிட முடியாது. உலகமே வியப்புடன் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தமிழக அரசு, போலீஸாரைக் கொண்டு கலைத்தது இதே ஜனவரி 23 ஆம் தேதிதான். தங்களின் பண்பாட்டை மீட்டெடுக்க ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் போராடி வென்ற ஜல்லிக்கட்டு வெற்றியை இன்று யார் யாரோ உரிமை கொண்டாடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை களத்தில் நின்று போராடி காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பல போராட்டக்காரர்களில்... ஒருசிலர் மட்டும் தங்களது கருத்துகளை இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்....

கிரேஸ் பானு (ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முதல் நாளிலிருந்து இறுதிநாள் கலவரம் வரை மெரினா களத்திலேயே இருந்து தீவிரமாகப் போராடியவர். காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவர்)

காவலர்களால் தாக்கப்படும் கிரேஸ் பானு

காவலர்களால் தாக்கப்படும் கிரேஸ் பானு

''உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஓராண்டு நிறைவு என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இளைஞர்களும், பொதுமக்களும் நினைத்தால் எவ்வளவு பெரிய அரசையும், அதிகார வர்க்கத்தையும் சாய்த்துவிட முடியும் என்று உலகுக்கு உணர்த்திய சம்பவம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் நமது பண்பாட்டை மீட்க மிகப்பெரிய அளவிலான போராட்டம் செய்தார்கள். இந்த வெற்றி தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம். அதைவிடுத்து தனிமனிதர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பர்ய விளையாட்டு.... தயவு செய்து அதை ஜாதிய விளையாட்டாக இனி விளையாடாதீர்கள். போராடிய அத்தனை இளைஞர்களும், பொதுமக்களும் அதை ஒரு விளையாட்டாக, நமது பண்பாட்டு மீட்பாகக் கருதித்தான் போராடினார்களே தவிர, குறிப்பிட்ட ஒருசில ஜாதியினர் மட்டும் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் போராடவில்லை. ஜல்லிக்கட்டை அனைத்து மக்களும் ஜாதி, மத பாகுபாடின்றி விளையாட வேண்டும். அதுதான் ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டு வந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்!''

உமர் முக்தார் (அலங்காநல்லூர் சென்று போராடி, ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும் விதை போட்டவர்களில் இவரும் ஒருவர். அங்கு காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். இவரின் கார் காவலர்களால் உடைக்கப்பட்டதோடு, இவருடைய செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இப்போதும் காவலர்களால் வழங்கப்பட்ட 'சமூக விரோதி' பட்டத்தோடு, தமிழகத்தில் நடைபெறும் அனைத்துப் பிரச்னைகளிலும் கம்பீரமாகக் குரல் கொடுத்து வருபவர்)

உமர் முக்தர்

உமர் முக்தர்

''ஓராண்டு நிறைவு மிக மகிழ்ச்சியான விஷயம். இந்த வெற்றி ஒட்டுமொத்தத் தமிழ் இளைஞர்களால்தான் சாத்தியமானது. அன்று போராட்டம் நடக்கும்போது எந்த அரசியல் தலைவர்களையும் களத்தினுள் விடமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால், இன்று அதை மறந்துவிட்டு அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். அரசியல்வாதிகளால்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதைப் போல பேனர் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்கள் குடிக்கமாட்டோம் என்று உறுதி செய்தார்கள். ஆனால், இன்றோ அவை ஜோராக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டின்போது இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். சேலத்தில் லோகேஷ் என்ற இளைஞர் ஜல்லிக்கட்டுக்காக இறந்துபோனார். இன்று ஜல்லிக்கட்டுப் பேரவையில் இருக்கக்கூடிய எவரும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களைச் சந்திக்கவில்லை. ஆறுதல் வார்த்தைகூட யாருக்கும் சொல்லவில்லை. ஆனால், கார்ப்பரேட் கம்பெனிகளுடன் சேர்ந்துகொண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த திட்டம் போட்டு வருகின்றனர். இது பெரும் ஆபத்து. உரிமைக்காகப் போராடியவர்கள் அனைவரும் சமூக விரோதிகளாகிவிட்டனர். வெட்டி விளம்பரத்துக்காக வந்தவர்கள் ஹீரோவாக மாறிவிட்டனர். முகம் கூட தெரியாத எவ்வளவோ இளைஞர்கள் தமிழ் மண்ணின் உரிமைக்காக ஒவ்வொரு பிரச்னையிலும் குரல் கொடுத்துக்கொண்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு என்ற ஒரு போராட்டம் மட்டும் நமது பசியைத் தீர்த்துவிடப் போவதில்லை. நமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நோக்கில் எந்தப் பிரச்னை வந்தாலும் இளைஞர்களும் பொதுமக்களும் சேர்ந்து போராடவேண்டும். இல்லையென்றால், நாளை நம் தலைமுறை இங்கு வாழ முடியாது''

ஜல்லிக்கட்டு போராட்டம்

கார்த்திகா (அலங்காநல்லூர் சென்று போராடி, ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும் விதை போட்டவர்களில் இவரும் ஒருவர். அங்கு காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். இப்போதும் காவலர்களால் வழங்கப்பட்ட சமூகவிரோதி பட்டத்தோடு, தமிழகத்தில் நடைபெறும் அனைத்துப் பிரச்னைகளிலும் கம்பீரமாகக் குரல்கொடுத்து வருபவர்.)

கார்த்திகா

கார்த்திகா

''ஜாதி, மதம் கடந்து பல லட்சம் மக்களை ஒன்றிணைத்த ஜல்லிக்கட்டுக்கு நன்றி. மகிழ்ச்சியான தருணத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். நமது பாரம்பர்ய விளையாட்டை மீட்டெடுக்க வந்த லட்சக்கணக்கான மக்கள், நமது உரிமை மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளின்போது ஏன் குரல் கொடுக்க மறுக்கிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் எங்கே? ஜல்லிக்கட்டுக்குப் பிறகு, ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் பிரச்னை, நீட் தீர்வு, நதிநீர் பிரச்னை, தற்போது பேருந்துக் கட்டண உயர்வு.... இன்னும் எவ்வளவோ பிரச்னைகள் நம்மை சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. இதற்காக ஏன் வீதிக்கு வந்து போராடத் தயங்குகிறார்கள்? போலீஸார் அடிப்பார்கள், கைது செய்வார்கள் என்ற பயமா? இப்படி அனைத்துக்கும் பயந்துகொண்டே இருந்தால், எப்படியோ சகித்துக்கொண்டு நாம் வாழ்ந்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால், நமது சந்ததி இங்கு எப்படி வாழ்வார்கள்? அவர்களுக்காக என்ன வளத்தை, என்ன வாழ்வாதாரத்தை நாம் விட்டுச் செல்லப்போகிறோம். தமிழ்நாட்டில் நடக்கின்ற பிரச்னைகளைத் தீர்க்க தனிமனித மாற்றம் கண்டிப்பாகத் தேவை. தமிழ்நாட்டில் எந்தத் தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். அரசியல்வாதிகள் எதையும் நமக்கு ஓசியில் செய்துவிடவில்லை. தண்ணீர், உணவு, வாழ்விடம், மின்சாரம் என அனைத்துக்குமே நாம் வரி கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி வாங்கும் வரிப் பணத்தில் ஒரு சிறிய அளவேனும் மக்களுக்கு நல்லது செய்கிறார்களா? நமது உரிமை பறிபோகும்போது, அதை மீட்க அனைவரும் தயவு செய்து வீதிக்கு வாருங்கள். அதிகார வர்க்கத்தையும், அரசியல் வர்க்கத்தையும் நடுங்கச் செய்வோம்'' 

போராட்டத்தில் குழந்தை

கீதா (அலங்காநல்லூர் சென்று போராடி, ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும் விதை போட்டவர்களில் இவரும் ஒருவர். கடுமையானத் தாக்குதலில் உயிருக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டது. முகம் கிழிந்து, முக எலும்புகள் உடைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல மாத சிகிச்சைக்குப் பின் நலமானார். இப்போதும் இவர் தமிழகப் பிரச்னைகளுக்காகக் களமாடி வருகிறார்.)

படுகாயமடைந்த நிலைமையில் கீதா

படுகாயமடைந்த நிலைமையில் கீதா

''இப்போதும் காவலர்களால் வழங்கப்பட்ட சமூக விரோதிப் பட்டம் தொடர்ந்து வருகிறது. எங்கு சென்றாலும் காவலர்களால் தடுத்து நிறுத்தப்படுகிறேன். இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூர் சென்றிருந்தேன். மக்கள் அனைவரின் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம். சென்ற ஆண்டு மக்களை தாக்கிய காவலர்களும், தாக்கச் சொன்ன அரசியல்வாதிகளும் ஜல்லிக்கட்டு மேடையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். ஜல்லிக்கட்டின்போது இளைஞர்களையும், பொதுமக்களையும் தாக்கிய, தாக்கச் சொன்ன அதிகார வர்க்கத்தினருக்கு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் தற்போது நடந்துவரும் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு வேண்டி குரல் கொடுக்க அனைத்து மக்களும் ஒன்றாகக் களம் இறங்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கும், காவலர்களுக்கும் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்... உங்களுக்கும் சேர்த்துதான் மக்கள் போராடுகிறார்கள் என்பதை மட்டும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அதை விடுத்து மீண்டும் மீண்டும் மக்களைத் தாக்க முற்பட்டால், எங்கள் பதில் ஒன்றுதான்... 'கொம்பு வைத்திருக்கும் காளைகளுக்கே எம் தமிழினம் அஞ்சியதில்லை... கேவலம் கம்பு வைத்திருக்கும் காவலர்களுக்கா எம் தமிழினம் அஞ்சிவிடப்போகிறது?'


டிரெண்டிங் @ விகடன்