’’13 வருஷமாக எந்த அதிகாரியும் எங்க கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை!’’ குமுறும் சேலம் மக்கள்

சேலம் திருமணிமுத்தாறு ஆற்றோர வடக்குத் தெரு பிற்படுத்தப்பட்டோர் மக்கள் வீட்டு மனை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று (23.1.2018) ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியின் தலைவர் கண்ணன், ''சேலம் மாநகராட்சியை ஒட்டிச் செல்லும் திருமணிமுத்தாறு கரையோரமாக நீண்டகாலமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தார்கள். கடந்த 2006-ம் ஆண்டு சேலம் மாநகராட்சி அதிகாரிகள், ‘ஆற்றில் வெள்ளம் வந்தால் நீங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவீர்கள். அதனால் உங்களுக்கு மாற்று இடம் கொடுக்கிறோம். இந்த வீடுகளை காலி செய்ய வேண்டும்’ என்று கூறியதை நம்பி வீடுகளை காலி செய்துவிட்டு, சிலர் வாடகை வீட்டிற்கு குடிபோனார்கள். சிலர் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறார்கள். சிலர் வீடு வாசல் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2006-ம் வருடத்திலிருந்து, தற்போது வரை 13 வருடங்களாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியபடி இலவச வீட்டுமனை கொடுக்கவில்லை. வீட்டுமனை பட்டா கேட்டு ஒவ்வொரு வாரமும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம். ஆனால், எங்களுடைய கோரிக்கையை எந்த கலெக்டரும் கேட்கவில்லை. பிரிட்டீஷ் அரசு கூட மக்களின் உண்மையான போராட்டத்திற்கு செவி சாய்த்தார்கள். உதவி செய்தார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் ஒரு அடி காலி நிலம் கேட்டு கடந்த 13 வருடமாகப் போராடி வருகிறோம். எங்களை யாரும் கண்டுக்கொள்ளுவதில்லை.தொடந்து அரசு எங்களுடைய கோரிக்கையை அலட்சியம் செய்து, இலவச வீட்டு மனை பட்டா  கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் குழந்தை குட்டிகளோடு குடியேறும் போராட்டத்தை அறிவிப்போம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!