கைமாறக் காத்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்! - உற்சாகத்தில் வனத்துறையினர்

ளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் உள்ளே மாஞ்சோலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர்  பரப்பளவுகொண்ட தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டுவந்தன. அதனால் மலைப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்ற இயலாமல் தவித்து வந்த வனத்துறையினருக்கு சாதகமாக வந்திருக்கிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், வனத்துறையினர். 

மாஞ்சோலை

குமரி முதல் குஜராத் வரை பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில், குமரி முதல் குமுளி வரை உள்ள பகுதி அகத்தியர் மலை என அழைக்கப்படுகிறது. பல்லுயிர் மையமான இந்தப் பகுதியில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும் 14 உப நதிகளும் இந்த வனப் பகுதியிலேயே உருவாகின்றன. 1,867 மீட்டர் உயரம் கொண்ட அகத்தியர் மலையில் 225 அரிய வகை தாவரங்கள் உள்ளன. அத்துடன் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகள் இந்த மலைகளில் வளர்ந்துள்ளன.

இத்தகையப் பெருமை வாய்ந்த இந்த மலையின் நடுவே 8,374 ஏக்கர் நிலம் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பி.பி.டி.சி) என்ற நிறுவனத்தின் வசம் இருக்கிறது. அடர்ந்த மலைப் பகுதியில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வாழும் பகுதியின் நடுவே இந்த நிறுவனம் தேயிலையைப் பயிரிட்டு வருகிறது. இதனால் விலங்குகளின் வாழ்விடங்கள் மட்டும் அல்லாமல் நதிகளின் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவையும் கேள்விக்குள்ளாகின.

வனத்தின் நடுவே பி.பி.டி.சி நிறுவனத்துக்கு 8,374 ஏக்கர் நிலம் கிடைத்தது எப்படி? முன்பு, இந்த நிலங்கள் அனைத்தும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. திருவாங்கூர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் அவரது உறவினருக்கும் இடையே ஏற்பட்ட பகையைத் தீர்க்க சிங்கம்பட்டி ஜமீனின் உதவி நாடப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், சிங்கம்பட்டி ஜமீனின் இளவரசர் மரணம் அடைந்துவிட்டார். தங்களுக்கு உதவ வந்த இடத்தில் இப்படி நடந்து விட்டதே என்கிற வேதனையில் மார்த்தாண்ட வர்மா சுமார் 74,000 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீனுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டார்.

பின்னர் சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு ஒருவர், சென்னையில் படிக்கச் சென்ற இடத்தில், கொலை வழக்கில் சிக்கினார். அந்த வழக்குச் செலவுக்கு நிறைய பணம் தேவைப்பட்டதால், தனது நிலத்தில் இருந்து 8,374 ஏக்கர் மலைப் பகுதியை பி.பி.டி.சி நிறுவனத்துக்கு 1929-ம் வருடம் 99 வருட குத்தகைக்குக் கொடுத்தார். இடையில், 1948-ம் வருடம் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் வந்தபோது சிங்கம்பட்டி ஜமீன் வசம் இருந்த மலைப்பகுதிகளிலிருந்து 23,000 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால், அரசிடம் அனுமதி பெற்று பி.பி.டி.சி நிறுவனம் குத்தகையைத் தொடர்ந்தது

.மாஞ்சோலை தேயிலை தோட்டம்

இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள 895 சதுர கி.மீ பகுதியில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதுதான் தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்கிற பெருமை பெற்றது. இந்த நிலையில், 1978-ம் வருடம் தமிழக அரசு, மலைப் பகுதிகளில் இருந்த குத்தகை நிலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றிணைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பி.பி.டி.சி நிறுவனம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. புலிகள் காப்பகத்தை மேம்படுத்தும் வகையில் குத்தகைதாரர்களை அகற்ற அரசு, நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து பி.பி.டி.சி நிறுவனம் சார்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டன.

நெல்லை மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களிலும் பி.பி.டி.சி நிறுவனம் வழக்குகளைத் தொடர்ந்து தங்களுடைய குத்தகை நிலத்தை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இறுதி வெற்றியை வனத்துறை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் குத்தகை காலம் 2028-ல் முடிவுக்கு வர இருக்கும் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வனத்துறையினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்துப் பேசிய களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரான வெங்கடேஷ், ``கடந்த 40 வருட காலமாக வனத்தைக் காப்பாற்றும் முயற்சியாக பி.பி.டி.சி நிறுவனத்துடன் சட்டப் போராட்டம் நடத்திவந்தோம். இப்போதுதான் நல்ல முறையில் முடிவு கிடைத்திருக்கிறது. 1906-ல் வெளியிடப்பட்ட நெல்லை கெஜெட்டில், அகத்திய மலைப் பகுதி மிகச்சிறந்த வனப் பகுதி என்றும் அதன் காரணமாகவே அங்கிருந்து தாமிரபரணி உற்பத்தியாகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

வெங்கடேஷ்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மலைப் பகுதி தனியார் கையில் இருந்தது. அவர்கள் பயிரிட்டுவரும் தேயிலைச் செடிகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்திவருவதால், தாமிரபரணி நதி சீர்கெட்டது. ஓராண்டுக்கு ஓர் ஏக்கருக்கு வெறும் ரூ.1.75 என்கிற குத்தகையே பி.பி.டி.சி நிறுவனத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். இதுதொடர்பாக தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்துடன், பாதுகாக்கப்பட்ட வனமாக அகத்தியர் மலையை அறிவிக்க வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு சில உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.

அதை எதிர்த்து தேயிலைத் தோட்ட நிறுவனத்தினர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், புலிகள் காப்பகமாக அறிவித்ததை எதிர்த்ததுடன், தாங்கள் வனப் பகுதியில் விவசாயம் செய்வதால், அந்த நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரினார்கள். அத்துடன், வனத்துறை சார்பாக குத்தகை தொகையை மறுவரையறை செய்ய முடிவு செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இந்த வழக்கை நெல்லை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அங்கும் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோதிலும், குத்தகை காலம் முடியும் வரையிலும் பயிர் செய்துகொள்ளலாம் என அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், ஜனவரி 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பில், பி.பி.டி.சி நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அதனால் தமிழக அரசு, 23,000 ஹெக்டேர் நிலத்தைப் புலிகள் காப்பகமாக அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளரான முகமது நசிமுதீன் அதிகாரபூர்வமாக அறிவிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி முதல் 23,000 ஹெக்டேர் நிலமும் புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். களக்காடு-முண்டந்துறை வனப்பகுதிக்குள் பி.பி.டி.சி மட்டும் அல்லாமல் தனியார் மற்றும் ஆதீனத்துக்குச் சொந்தமான 30 இடங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்படும்.

இந்தப் பகுதியில் 20 புலிகள்வரை இருக்கின்றன. 17 புலிகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்துவிட்டோம். தற்போது இந்த நிலப்பரப்பும் வனத்துறையுடன் சேரும்போது புலிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். களக்காடு-முண்டந்துறை பகுதி மிகவும் அருமையான இடம். இங்கு சுமார் 40,000 ஹெக்டேர் பரப்பளவில் ஆள் நடமாட்டமே கிடையாது. எந்த வனத்தில் புலிகள் இருக்கிறதோ அதுதான் இயற்கை எழில் சூழ்ந்த முழுமையான வனமாக இருக்கும். தற்போது அதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. 

தற்போதைய சூழலில், பி.பி.டி.சி நிறுவனத்திடம் குத்தகையை அதிகரித்து நோட்டீஸ் வழங்க இருக்கிறோம். நிலுவைத் தொகையுடன் சேர்த்து 300 கோடியையும் அரசுக்குச் செலுத்த வேண்டிய 700 கோடி ரூபாய் என மொத்தம் 1000 கோடி ரூபாயை வழங்குமாறு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தத் தீர்ப்பு மூலமாக நெல்லை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாமல் 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்க்கும் தாமிரபரணியைப் பாதுகாக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!