வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (24/01/2018)

கடைசி தொடர்பு:01:20 (24/01/2018)

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த ஆளுங்கட்சி எம்.பி.! பணிந்த அரசு அதிகாரிகள்


விவசாயி

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப்பாய்ந்து சென்று கேரளாவுக்குள் நுழைந்து இறுதியாக அரப்பிக்கடலில் கலக்கும் நதிகளைத் தடுத்து நிறுத்தி, அணைகள் கட்டி, அந்த அணை நீரை கிழக்கு நோக்கி தமிழ்நாட்டுக்குத் திருப்பி விட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி கொடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட திட்டம்தான் பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பாசனத் திட்டம்.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் கேரள மாநில அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, சோலையாறு அணையிலிருந்து 12.3 டி.எம்.சி மற்றும் ஆழியாறு அணையிலிருந்து 7.25 டி.எம்.சி நீரை ஆண்டுதோறும் கேரளாவுக்குத் தமிழகம் வழங்கி வருகிறது. ஓடைகள், அருவிகள், மழைநீர் போன்ற நீராதாரங்கள் மூலம் ஆழியாறு அணையில் நிரம்பும் தண்ணீரை மட்டும்தான் கேரளாவுக்குக் கொடுக்க வேண்டும் என்கிறது ஒப்பந்தம். ஆனால், ஆழியாறு அணையில் போதிய தண்ணீர் இல்லை என்பதைக் காரணம் காட்டி, பரம்பிக்குளம் அணையில் உள்ள தண்ணீரை, ஆழியாறு அணைக்குத் திருப்பிவிட்டு, வினாடிக்கு 400 கன அடி வீதம், கேரளாவுக்குக் கொடுத்து வருகிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள். இதனால் பரம்பிக்குளம் அணையிலிருந்து கோவை, திருப்பூர் மாவட்ட விவசாய நிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறும் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் இந்தச் செயல், விவசாயிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி


அதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனர் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச்சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள். கேரளாவுக்குப் போகும் பரம்பிக்குளம் தண்ணீரை உனடியாக நிறுத்தவேண்டும். பி.ஏ.பி.எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில் உள்ள முதல் மண்டலத்திற்கு இரண்டு சுற்றுதண்ணீரை திருமூர்த்தி அணையிலிருந்து உனடியாகத் திறந்து விட்டு, 95 ஆயிரம் ஏக்கரில் வாடும் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக இருந்த விவசாயிகள், கியாஸ் சிலிண்டர், சமையல் பாத்திரங்கள், உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து பொதுப்பணித்துறை அலுவலகத் திடலில் சமையல் செய்யத் தொடங்கினார்கள்.

இதற்கிடையில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. மகேந்திரன், மடத்துக்குளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் ஆகியோர் பொதுப்பணித்துறை வளாகத்திற்கு வந்து அங்கிருந்த விவசாயிகளைச் சந்தித்து உள்ளிருப்புப் போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அதுவரை விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் மெத்தனம் காட்டிய  பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், விவசாயிகள் பிரதிநிதிகள் சிலரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ‘‘கேரளாவுக்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்தும்வரை , எத்தனை நாள்கள் ஆனாலும் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடமாட்டோம்’’ என்கிற நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதியாக இருந்ததை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருவழியாக விவசாயிகள் கோரிக்கைக்கு உடன்பட்டனர்.

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்குத் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் உடனே நிறுத்தப்படும். அதைத் தொடர்ந்து வருகிற 31-ம் தேதி முதல் மண்டலத்தில் உள்ள 95 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு சுற்று தண்ணீர் வழங்கப்படும் என்கிற தகவலை பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் கலைமாறன் விவசாயிகள் மத்தியில் அறிவித்தார். இதில் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் கலைந்து சென்றனர். தொடர்ந்து 9 மணிநேரம் நடந்த போராட்டம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.