வெளியிடப்பட்ட நேரம்: 01:40 (24/01/2018)

கடைசி தொடர்பு:01:40 (24/01/2018)

ம.தி.மு.க. இளைஞரணி நிர்வாகியை அநாகரிகமாகப் பேசிய விவகாரம்! அமைச்சர் மணிகண்டன் மீது காவல்நிலையத்தில் புகார்

அ.தி.மு.க பொதுக் கூட்டத்தில் ம.தி.மு.க-வை சேர்ந்த இளைஞரணி நிர்வாகியை அநாகரிகமாகப் பேசிய அமைச்சர் மணிகண்டன் மீது உச்சிப்புளி காவல் நிலையத்தில் நேற்று (23.1.2018) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மணிகண்டன் மீது ம.தி.மு.க புகார்.
 

ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளியில் கடந்த சனிக்கிழமை இரவு அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன், ''காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்ததற்காக எனக்கு நன்றி தெரிவித்து போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்குதான் அந்த அதிகாரம் இருக்கிறது. ஆளும்கட்சிக்குத்தான் அதிகாரிகள் கட்டுப்படுவார்கள். ஆளும்கட்சி என்ன சொல்கிறதோ, ஆளும்கட்சி அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் அதிகாரிகள் கேட்பார்கள். யாரோ ஒருவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார்கள்.

இதுதெரியாமல் சிலர், பிரபாகரன், வைகோ படங்களைப் போட்டு அதிகாரிகளுக்கு நன்றி கூறியிருக்கிறார்கள். மேலும் சிலரோ அதிகாரிகளுக்கு நன்றி கூறி போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறி போஸ்டர் அடித்திருக்கிறார்கள். இந்தத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எனக்கு ஏன் நன்றி தெரிவிக்க மனம் வரவில்லை?.  நீ நல்ல மனிதனாக இருந்தால், நான் கொண்டுவந்த தண்ணியைக் குடிக்காத. அதிகாரிகளுக்கு நன்றி சொல்வது தவறான விஷயம். அதுகூட தெரியாமல், வால் போஸ்டர்  ஒட்டியிருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த அதிகாரிகள், அவர்களையெல்லாம் கூப்பிட்டு உடனடியாக எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டார். சில முட்டாள்கள், போஸ்டர் அடித்து கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறார்கள்'' என்று பேசியிருந்தார். அந்தப் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. இளைஞரணி நிர்வாகியை அமைச்சர் மணிகண்டன் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ம.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் பிரின்சோ ரைமண்ட், தனது கட்சியையும் கட்சி நிர்வாகிகளையும் தரக்குறைவாகவும், அசிங்கமான முறையிலும் பேசிய அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்குமாறு  உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரினை பெற்றுக்கொண்ட போலீஸார் ஒப்புகை ரசீது அளித்துள்ளனர்.