"2025 க்குள் நாள்தோறும் நபரொன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் சீராக வழங்கப்படும்!" - கண்காணிப்பு அலுவலர் உறுதி

 கரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குடிநீர்த் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கரூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் அறிவுரை வழங்கினார்.

கரூர் மாவட்டம், மேலமாயனூர், கட்டளை, பொன்நகர், இராமகிருஷ்ணபுரம்,கிட்டுதெரு, இராமானுஜம் நகர் மற்றும் பசுபதிபாளையம் போன்ற இடங்களில் கரூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், பூம்புகார் துறைமுக கழக நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான அண்ணாமலை, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் முன்னிலையில் நேற்று (23.01.2018) நடந்து முடிந்த மற்றும் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு குறித்து கண்காணிப்பு அலுவலர் அண்ணாமலை கூறுகையில், "மேலமாயனூரில் கரூர் நகராட்சிக்குட்பட்ட, இனாம் கரூர் பகுதிக்கு அமைக்கப்பட்டுவரும் நீர் சேகரிப்புக் கிணறு,மின்மோட்டார் பொருத்தும் பணி மற்றும் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகள் ரூ.1857.00 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம்,கே.வி.பி.நகரில் 4.15 இலட்சம் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தொட்டி மூலம் நீர் சேகரிக்கப்பட்டு,இத்தொட்டியிலிருந்து கே.வி.பி.நகர், வி.வி.ஜி.நகர்,இந்திரா நகர், இராமானுஜம் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கும்,ஒப்பந்ததாரர்களுக்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,தாந்தோணி நகராட்சி பகுதிகளுக்காக கட்டளை அருகில் காவிரியாற்றில் ரூ.2.516 லட்சம் மதிப்பில் கிணறு அமைக்கப்பட்டு பொன்நகர் பகுதியில் 4.95 இலட்சம் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தொட்டிக்கு நீர் உந்தப்பட்டு தாந்தோணி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல்,கரூர் நகராட்சிக்கு பசுபதிபாளையத்தில் 1.30 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், பசுபதிபாளையம் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு குடிநீர் வழங்கப்படும் பணியினை மக்கள் பாதை பகுதியில் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இராமானுஜர் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி பணியினையும், இராமகிருஷ்ணபுரம் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்க உள்ள பணிகளையும் விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இனாம்கரூர் நகராட்சி பகுதி மக்களுக்கு 2025ம் ஆண்டு மக்கள்தொகையை கணக்கில் கொண்டு நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் சீராக வழங்கப்படும்" என தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!