வெளியிடப்பட்ட நேரம்: 00:11 (24/01/2018)

கடைசி தொடர்பு:00:11 (24/01/2018)

வாழைப் பழத்துக்காக தகராறு!- நண்பனை கொலை செய்த இளைஞர்கள்

ஒரு வாழைப் பழத்துக்காக நடந்த சண்டையில் குடிபோதையில் நண்பனையே வெட்டிக் கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ்பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர், ஆனந்தராஜ். பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு முருகன் என்பவரைக் கொலை செய்து ஆற்றின் கரையோரத்தில் புதைத்த வழக்கில் இவர் இரண்டாவது குற்றவாளியாக உள்ளார். ஆனந்தராஜூம், அவரது நண்பர்களான விக்டர், ராஜீவ்காந்தி ராஜாசிங் உள்ளிட்டோர் அடிக்கடி மது அருந்துவது வழக்கம். 

கடந்த 21-ம் தேதி மதியம் ஆனந்தராஜூம் அவரது நண்பர்களும் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள். அப்போது ஆனந்தராஜ் வாழைப்பழம் கேட்டுள்ளார். அவரது நண்பர் வாழைப்பழம் வாங்கி வரவில்லை எனத் தெரிவித்து உள்ளார். மது போதையில் இருந்த ஆனந்தராஜ் கோபம் அடைந்து நண்பரை அடித்துள்ளார். இதில், நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.

ஆனந்தராஜ் அடித்ததால் கோபம் அடைந்த நண்பர்கள் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். வீட்டில் ஓய்வெடுத்த ஆனந்தராஜை வற்புறுத்தி பைக்கில் அழைத்துக் கொண்டு தாமிரபரணி ஆற்றில் உள்ள சீவலப்பேரி தடுப்பணை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து போதையை ஏற்றியுள்ளனர். பின்னர் அவருடன் தகராறு செய்துள்ளனர். 

அவரை அடித்து உதைத்ததுடன், அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதனை ராஜாசிங் என்பவர் தடுத்திருக்கிறார். அப்போது அவருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆனந்தராஜை கொலை செய்த அந்தக் கும்பல் உடலை அங்கேயே ஆற்றுக்குள் வீசிவிட்டு திரும்பி விட்டது. காயம் அடைந்த ராஜாசிங் என்ற இளைஞர் மட்டும் போதை தலைக்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 

அவரிடம் காயம் எப்படி ஏற்பட்டது? என மருத்துவர்கள் கேட்டபோது, பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான தான் கட்டட வேலை செய்யும்போது கம்பி குத்திவிட்டது எனச் சொல்லி சமாளித்து இருக்கிறார். மறுநாள் போதை தெளிந்ததும் மருத்துவ ஊழியர்களிடம், ’எனது நண்பன் ஆனந்தராஜ் எப்படி இருக்கிறான்? அவன் பிழைத்து விட்டானா?’ எனக் கேட்டுள்ளார். அதனால் சந்தேகம் அடைந்த மருத்துவ ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் ஆனந்தராஜை நண்பர்களே கொலை செய்து வீசிய சம்பவம் தெரிய வந்துள்ளது.

கொலை

போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் இன்று ஆனந்தராஜ் உடலை தாமிரபரணி ஆற்றில் இருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய ராஜீவ்காந்தி, விக்டர் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வாழைப்பழத் தகராறு காரணமாக நண்பர்களே கொடூரக் கொலையில் ஈடுபட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக நெல்லை பகுதியில் சாதிய வன்முறை நிகழும் ஆபத்து உருவாகி இருப்பதால் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.