வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (24/01/2018)

கடைசி தொடர்பு:15:26 (09/07/2018)

“வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்!”- ஜீயர் பிடிவாதம்

ஆண்டாள் குறித்த பேச்சுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பரமக்குடியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி பரமக்குடியில் உண்ணாவிரதம்

பரமக்குடி பெருமாள் கோயில் முன்பாக நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான பெருமாள், ஆண்டாள் பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்  ''கடந்த 20 நாட்களாக உலகமெங்கும் எரிமலை ஒன்று வெடித்துக் கொண்டு இருக்கிறது. லோக மாதாவான நம் தாய் ஆண்டாளை கூடாத வார்த்தைகளைக் கொண்டு வைரமுத்து பேசியிருப்பதைக் கண்டித்து உலகமெங்கும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நாளிதழ் ஆசிரியர் தன் தவறை உணர்ந்து ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் சன்னதியிலும், ஸ்ரீ மலைவார மாமுனி சன்னதியிலும் மன்னிப்பு கேட்டுள்ளார். அதேபோல், வைரமுத்துவும் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்கும் வரையில் போராட்டம் ஓயாது. பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் ஆண்டாள் நாச்சியார் அவர் மனதிற்குள் புகுந்து நல்ல புத்தியை கொடுத்து ஸ்ரீ வில்லிபுத்தூர்  வந்து மன்னிப்பு கேட்க செய்வார் என நம்புகிறோம். அவர் மன்னிப்பு கேட்கும் வரையில் போராட்டம் தோடரும்'' என்றார்.