பேருந்துக் கட்டண உயர்வு..! போலீஸாருடன் மல்லுக்கட்டிய மாணவர்கள்

சிவகங்கையில், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர் சுமார் 1500 பேர், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய சமரசப் பேச்சு தோல்வியில் முடிந்தது.

போலீஸார், கல்லூரியின் முன் கேட்டை அடைத்துக்கொண்டு மாணவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை மீறி மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வந்து பேருந்துக் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டுமென்று கோஷங்கள் எழுப்பினார்கள். அரண்மனை வாசல் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சிறிது நேரம் கழித்து மாணவர்கள் கலைந்து சென்றார்கள். அப்போது பேசிய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ``பேருந்துக் கட்டணம் 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதனால், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக இந்தக் கட்டண உயர்வைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு மாணவர்கள், சமூக அமைப்புகள் திரண்டதுபோல, திரண்டு போராடுவோம். நாங்கள் எல்லாம் கிராமப்புறங்களிலிருந்துதான் படிக்க வருகிறோம். இந்தக் கட்டண உயர்வால் கல்வியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!