வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (24/01/2018)

கடைசி தொடர்பு:08:22 (24/01/2018)

சிலைகளுக்காகப் பாசப்போராட்டம் நடத்திய கிராம மக்கள்!- வெறுங்கையுடன் திரும்பிய தொல்லியல் துறை

தஞ்சாவூர் மாவட்டம் நண்டம்பட்டி என்ற கிராமத்தில், புதுக்கோட்டையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கற்சிலைகள், கடந்த அக்டோபர் மாதம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகக் குழுவினரால் அடையாளம் காணப்பட்டது. பராந்தகன் காலத்தைச் சேர்ந்த அந்தக் கற்சிலைகளை மீட்கும் முயற்சியை அந்தக் குழு மேற்கொண்டது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் துரிதப்படுத்தியது. அந்தத் துறையின் முதன்மை ஆய்வாளர்கள், பரிந்துரைக் கடிதத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக சிலைகளை மீட்டு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறு பூதலூர் வட்டாட்சியர் ரமேசுக்கு உத்தரவிட்டார்.’



இதைத் தொடர்ந்து, நேற்று நண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வசந்த், செங்கிப்பட்டி காவல்துறையினரோடு சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டார். முள்பத்தைகளில் புதையுண்டுகிடந்த அந்தச் சிலைகளை ஜே.சி.பி வாகனத்தைத்கொண்டு வெளியே எடுத்தனர். அப்போது அங்கு திரண்டுவந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிலைகளை நாங்கள் புதுக்கோட்டைக்குக் கொடுக்க மாட்டோம்" என்று அந்தச் சிலைகளுக்கு ஒட்டுமொத்த கிராம மக்களும் உரிமை கொண்டாடினர். இதனால் சிலைகளை மீட்டும், அவற்றை புதுக்கோட்டைக்குக் கொண்டுவருவதில் சிக்கல் நீடித்தது. செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் பல மணிநேரம் பொறுமையாகப்  பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், கிராம மக்கள் உறுதியாக நின்றனர். சிலைகளை மீட்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. 
 


இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் காப்பக அதிகாரிகள், வெறும் கையுடன் ஊர் திரும்பினர். இந்தச் சம்பவத்தின்போது உடனிருந்த தொல்பொருள் ஆர்வலரும் ஆய்வாளருமான மணிகண்டனிடம் பேசினோம். "பொதுமக்கள் எல்லோரும் 'சிலைகளை நாங்களே பாதுகாப்போம்' என்று ஒருமித்த குரலில் கூறினார்கள். 'இன்றைக்கு இப்படிச் சொல்கிற நீங்கள்தானே இத்தனை வருடங்களாக அந்த அபூர்வச் சிலைகளை முள் பத்தையிலும் மனிதக்கழிவுகளுக்குப் பக்கத்திலேயும் போட்டுவைத்திருந்தீர்கள்' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'எங்களை மன்னித்துவிடுங்கள். இந்தச் சிலைகளின் அருமை பெருமை புரியாமல் இருந்துவிட்டோம். ஆனால், இனிமேல் அப்படி இருக்க மாட்டோம். இந்தச் சிலைகளை பொக்கிஷமாகப் பாதுகாப்போம்' என்றார்கள். அவர்கள் சொன்னதை நம்பி, ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்றுசேர்ந்து காட்டிய வைராக்கியமும் எங்களைப் பிரமிக்கவைத்தது. அதற்கு மதிப்பளித்து, சிலைகளை  நண்டம்பட்டி கிராம மக்களிடமே ஒப்படைத்துவிட்டுத் திரும்பிவிட்டோம்" என்றார்.