வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (24/01/2018)

கடைசி தொடர்பு:08:12 (24/01/2018)

ஜெயானந்த் தொடங்கிய மக்கள் பணியகம்..! பின்னணிக் காரணம் இதுதான்?

தினகரன் ஒருபுறம் கட்சி துவங்கும் திட்டத்தில் தீவிரம் காட்டிவரும் நிலையில், திவாகரன் மகன் ஜெயானந்த் 'போஸ் மக்கள் பணியகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, தனது ஆதரவாளர்களை அந்த அமைப்பின் கீழ் கொண்டுவரும் வேலையில் ஈடுபட்டிருப்பது, தினகரன் தரப்புக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்கள். 

Jayananthசசிகலா குடும்பத்தில் உள்ள உறவுகளிடையே தற்போது சுமுகமான சூழ்நிலை இல்லை என்பது பட்டவர்த்தனமாக வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது. தினகரனோ, அ.தி.மு.க-வை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அவருக்கு எதிராகக் குடும்பத்தில் சில நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன. தினகரன் தரப்புக்கும் திவாகரன் தரப்புக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது. அதேபோல, தினகரனுக்கும் இளவரசியின் வாரிசுகளுக்கும் இடையே  கடந்த சில மாதங்களாகவே, ஒத்துழையாமை இயக்கம் வெளிப்படையாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தான்  பெற்ற வெற்றி, தனது தனிப்பட்ட செல்வாக்கிற்குக் கிடைத்த வெற்றி என்று தினகரன்  கருதுகிறார். மேலும், இந்த வெற்றியையும் செல்வாக்கையும், தொடர்ந்து வரக்கூடிய தேர்தலிலும் பெறவேண்டும் என்றால் மன்னார்குடி மாஃபியா என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார் தினகரன். அதனால்தான், தான் துவங்க உள்ள கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தில் அ.தி.மு.க-விலும் சரி தனது குடும்ப உறுப்பி்னர்களுக்கு ஒருபோதும் இடம் அளித்துவிடக் கூடாது என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார். இதை, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடமும் நாசுக்காகச் சொல்லிவிட்டார் தினகரன். 

தினகரனின் இந்த முடிவுதான் அவர்கள் குடும்பத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திவாகரன் தரப்பு கடும் அப்செட் என்கிறார்கள். திவாகரன் குடும்பத்தைப் பொறுத்தவரை,  அவருக்குப் பதவி என்று ஒருபோதும் எண்ணவில்லை. ஆனால், தனது ஒரே மகன் ஜெயானந்துக்குப் பதவி வேண்டும். எதிர்காலத்தில், தமிழக அரசியலில் தனது மகன் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று வெளிப்படையாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறார் திவாகரன். தனது மகனை முன்னிலைப்படுத்தி விளம்பரங்கள் செய்ய தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார். 

அதேபோல, அ.தி.மு.க-விலோ அல்லது தினகரன் ஆரம்பிக்கும் புதுக்கட்சியிலோ, தனது மகனுக்கு இளைஞர் அணி பதவியைத் தர வேண்டும் என்ற முடிவில் திவாகரன் இருந்துவருகிறார். ஆனால், இதற்கு தினகரன் தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருந்துவந்தார் திவாகரன். அந்த கடுப்பில்தான் மன்னார்குடியில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதாவின் மரணம்  டிசம்பர் 4-ம் தேதி என்ற குண்டை போட்டு, மீடியாவைத் தன்பக்கம் திருப்ப முயன்றார். அதற்குக்கூட பதில் அளி்த்த திவாகரன், “என் உறவுகள் சொல்லும் கருத்து அவர்களின் சொந்தக் கருத்து” என்று கூறி தன் பக்கம் பாதுகாப்பாக இருந்துகொண்டார். 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திவாகரனின் மகன் ஜெயனாந்த், இனியும் உறவுகளை நம்பி இருப்பதைவிட, தனது சொந்த செல்வாக்கை வளர்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால், சில தினங்களுக்கு முன் தனது முகநுாலில், “சுபாஷ் சந்திர போஸ் பெயரில் மக்கள் பணியகம் துவங்கி உள்ளேன்” என்று வெளிப்படையாக அறிவித்தார். அந்தப் பதிவில், “மாவீரன் #சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பெயரில் ஒரு மக்கள் பணியகம் அமைக்கபட்டு, என்னை சந்தித்த இளைஞர்கள் மற்றும் சந்திக்க இருக்கும் இளைஞர்கள் ஒரு குடையின் கீழ் மக்கள் பணியாற்ற ஒரு இயக்கம் தொடங்கப்படும்.

சின்னம்இதில், அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் பிரச்னைகளுக்குக் குரல்கொடுக்கும் வகையில் நமது சக்திக்கேற்ப தொண்டுகளைச் செய்ய இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களின் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள தனியாக ஒரு சமூக தளம் உருவாக்கப்படும். அதில், மக்களின் எளிய வாழ்கையில் வரும் பிரச்னைகள் மற்றும் இன்னல்களுக்குத் தீர்வுகாண கடும் முயற்சி எடுக்கப்படும். என்னை சந்திக்க வந்த அனைத்து இளைஞர்களும் நீங்கள் இதுவரை செய்துவந்த சமூகப் பணிகளில், எங்களை நாங்கள் சரியாக ஈடுபடுத்திக்கொள்ள ஒரு மையப் புள்ளி இல்லை. அதனால், நாங்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் இருந்து பணியாற்றவும், உங்களுடனும் உங்கள் ஆதரவாளர்களுடனும் கடைசிவரை தொடர்பில் இருக்கவும் பயன்படும் எனத் தெரிவித்து, என்னை ஒரு மக்கள் பணியக இயக்கத்தை ஆரம்பிக்கச் சொன்னார்கள். அதைக் கருத்தில் கொண்டே மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரில் மக்கள் பணியகம் தொடங்கப்படுகிறது” என்று அறிவிப்பு செய்தார். 
அதாவது, எந்த இளைஞர் அணிப் பதவியை இவர் எதிர்பார்த்து இருந்தாரோ, அதையே மக்கள் பணியகம்  என்ற பெயரில் துவங்கி இளைஞர்களை ஒன்றிணைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட உள்ளார். மாவட்ட வாரியாகவும், மாநில வாரியாகவும் இதற்கு பொறுப்பாளர்களும் நியமிக்கபட உள்ளார்கள். ஏற்கெனவே தினகரன் கட்சியோ, அல்லது பேரவையோ ஆரம்பிக்கும் திட்டத்தில் தீவிரம் காட்டிவரும் நிலையில், அவரை முந்திக்கொண்டு இந்த இயக்கத்தைத் துவக்கியுள்ளார் ஜெயானந்த். இந்த இயக்கம் துவக்கப்பட்டதற்கு, திவாகரன் ஆசியும் முழுமையாக இருக்கிறது என்கிறார்கள். இப்போதே இந்த இயக்கத்துக்கு ஆதரவாக மன்னார்குடியில் ப்ளக்ஸ் போர்டுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. அதில் “ இளைஞர்களின் எழுச்சி நாயகனே” என்ற பட்டத்தோடு, ஜெயானந்த் படம் பெரிதாகப் போடப்பட்டுள்ளது. மேலும், தனது பணியகத்தின் லட்சினையையும் அவர் ஃபேஸ்புக் வாயிலாகப் பதிவிட்டுள்ளார். 

 அதேநேரம், சுபாஷ் சந்திர போஸ் பெயரைப் பயன்படுத்தியிருப்பது, மீண்டும் முக்குலத்தோர் குறியீடாகவே இந்த இயக்கம் பார்க்கப்படும் சூழ்நிலையை  ஏற்படுத்தியிருப்பதாக  திவாகரன் ஆதரவாளர்களிடம் கருத்து நிலவுகிறது. இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதும், விரைவில் சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தவும் ஜெயானந்த் தயாராகிவருகிறார். ஆனால், தினகரன் தரப்பு செல்லும் வேகத்திற்கு இந்த இயக்கம் எல்லாம் முன்னால் நிற்கமுடியாது, தினகரன் ஒருவிசயத்தில் தெளிவாக இருக்கிறார். இனி குடும்ப உறுப்பினர்கள் யாரையும்  கட்சிக்குள் கொண்டுவரும் எண்ணம் துளியும் அவரிடம் இல்லை.” என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். 
பேரவையா? கட்சியா? என்று தினகரன் குழப்பத்தில் இருந்துவரும் நிலையில், சத்தமில்லாமல் இயக்கத்தைத் துவக்கி, தினகரனுக்கு செக் வைத்துவிட்டார் ஜெயானந்த்.