சாலைப் பாதுகாப்பில் ரோபோ... டெங்கு கொசு ஒழிப்பான்... புதுப்புது கண்டுபிடிப்புகளால் அசத்தும் வெள்ளியணை அரசுப்பள்ளி!

            
  
 அரசுப்பள்ளி

சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கு அறிவியல் மூலம் தீர்வு காணும் விதத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 15 கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அதைக் காட்சிப்படுத்தும் விதமாக 37,000 கிலோ மீட்டர் அறிவியல் பயணமாக மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய  மற்றும் சர்வதேச அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்துகொண்டு மக்களிடமும் மாணவர்களிடமும் அறிவியல் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி சாதித்துள்ளனர் அரசுப்பள்ளி மாணவர்கள்.

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் இந்தச் சாதனைகளைச் செய்துள்ளனர். இம்மாணவர்கள் ஆசிரியர் தனபால் அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளான சாலைப் பாதுகாப்பில் ரோபோ, அணுமின் உற்பத்தியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், சீமைக்கருவேலம் மரத்திலிருந்து மின்சாரம் தயாரித்தல், சி.என்.4 நேப்பியர் பயிரிலிருந்து மின்சாரம், வேதிப்பொருள் பிரித்தெடுத்தல், சூழலியல் காக்கும் கழிவறை, வைக்கோல் மறுசுழற்சி, நிலத்தடி நீர்த்தாங்கிகளை செறிவூட்டல், தலைக்கவசம் அணிந்தால்தான் இருசக்கர வாகனம் இயங்கும், டெங்குக் கொசு ஈர்ப்பான், பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம், குளங்களில் ஆகாயத்தாமரை அகற்றி மறுசுழற்சி, வீடுகள் மற்றும் தொழிற்சாலையில் ஆற்றல் சேமிப்பு, பார்த்தீனியம் செடியில் இருந்து இயற்கை உரம் போன்ற 15-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்தப் பள்ளி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.    

அதோடு, அந்தக் கண்டுபிடிப்புகள் பள்ளிக்கல்வித்துறை, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் பல்வேறுகட்ட அறிவியல் கண்காட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை பங்குபெறச் செய்து, 30 தங்கப்பதக்கங்களுடன், 20 முறை முதல் பரிசும் பெற்று, இந்தப் பள்ளியைச் சேர்ந்த 293 மாணவர்கள் 'இளம் விஞ்ஞானிகள்' சான்றும் பெற்றுள்ளனர்.
 தனபால்இதுகுறித்து, ஆசிரியர் தனபாலிடம் பேசினோம்.

 ``கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற நோக்கில் பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் குழு ஆரம்பித்தோம்.  6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, பள்ளி வேலை நேரம் தவிர காலை, மாலை தலா ஒரு மணி நேரம் பயிற்சியளித்தேன். விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் நாளிதழ்கள் வாசித்தல், அறிவியல் ஒளி, துளிர், விழுது, கல்விச்சுடர், விஞ்ஞானச் சிறகு ஆகிய மாதாந்திர அறிவியல் புத்தகம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, ஆண்டுக்கு 420 மணி நேரம் கூடுதல் பயிற்சி அளித்து வருகின்றேன். மேலும், களப்பயணமாக தொழிற்சாலை, நேரடி விவசாயம் மற்றும் துறை சார்ந்த இடங்களுக்கு மாணவர்களை நேரில் அழைத்துச் சென்று ஆய்வு மேற்கொள்ளுதல், அறிவியல் நாடகம், ஆய்வுக்கட்டுரை, கருத்தரங்கம், வினாடி வினா போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் பங்குபெறச் செய்து அவர்களின் விஞ்ஞான அறிவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தேன். இதனால், மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வருவதுடன், பாடங்களை செய்முறையாக செய்து கற்பதால், 10-ம் வகுப்பு அரசுப்பொதுத் தேர்வில் அனைவரும் தேர்ச்சிபெற்று, அறிவியலில் 100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.


 ஹெல்மெட்         ஹெல்மெட்

மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசுப்பொதுத்தேர்வில் 100 மதிப்பெண் பெறும் இளம் விஞ்ஞானிகள் குழு மாணவர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் என சொந்த செலவில் ஆண்டுதோறும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றேன். இச்செய்தியை அறிந்து மற்ற மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.கருப்பண்ணன் அவர்களின் சீரிய முயற்சியால் பள்ளி முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களிடம் நன்கொடைப் பெற்று ஒரு லட்சம் ரூபாயில் இளம் விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வகம் சீரமைக்கப்பட்டு, மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், கட் செவி மூலம் ஆர்வமான வெளி மாவட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து அறிவியல் சோதனைகள் செய்ய தினந்தோறும் பயிற்சி அளித்துவருகிறேன்" என்றார் ஆசிரியர் தனபால்.


    டெங்கு கொசு ஈர்ப்பான்

மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் ஐ.சி.டி தொழில்நுட்பத்தில் மாணவர்கள் நடித்து, ஆசிரியர் தனபால் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ,பி,ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் கட்டணமில்லாமல் 639 கல்வி நிறுவனங்களுக்கு 956 டி.வி.டி வழங்கப்பட்டு, 5,59,269 மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும்,100 எளிய அறிவியல் சோதனைகள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லா தூய்மை இந்தியா என குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிட உள்ளார்கள். அதைக்கொண்டு, வெள்ளியணை மட்டுமின்றி, கரூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்புற தூய்மை பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த இருக்கிறார்கள்.

அதேபோல், மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர் தனபாலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தென்னிந்திய அளவில் அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்று பரிசும், பாராட்டும் பெற்றுள்ளார். குறிப்பாக, ஜனவரி 2017-ல் பாண்டிச்சேரியில் நடைபெற்ற கண்காட்சியில் தென்னிந்திய அளவில் இரண்டாம் பரிசும், விருதும் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, 2009-ம் ஆண்டு ஆசிரியர் தனபாலிடம் பயிற்சி பெற்று, இன்ஸ்பயர் விருதுபெற்ற மாணவர் பொ.ஹரிஹரன் தற்சமயம் ஜப்பானில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார் என்பது வெள்ளியணை அரசுப்பள்ளிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அடுத்த ஆராய்ச்சிகுறித்து மாணவர்களை ஆயத்தப்படுத்த தன் அறிவியல் பயணத்தைத் தொடர்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்

அப்துல்கலாம் நினைவு விருது, சமூக சிற்பி விருது, விஸ்வேஸ்வரய்யா விருது, வித்தகர் விருது, தொழில்சேவை விருது, கல்வியில் சிறந்த சேவை விருது, அப்துல் கலாம் சேவகர் விருது, அன்பாசிரியர் விருது உள்பட 20 விருதுகள் பெற்று, தான் அரசுப்பணியில் சேர்ந்ததில் இருந்து இன்று வரை மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகிறார் ஆசிரியர் தனபால். அதோடு, இப்படி மாணவர்களை அறிவியல் ஆய்வுகளில் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுத்த இளம் விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வகத்தையும் ஸ்பான்ஸர்கள் உதவியோடு அமைத்திருக்கிறார். "இந்தப் பள்ளியில் இருந்து தனது ஓய்வு காலத்துக்குள் இருபது அப்துல்கலாம்களையாவது உருவாக்குவதுதான் எனது லட்சியம்" என்கிறார் ஆசிரியர் தனபால்.

வாழ்த்துகள் சார்..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!